NPP இடைக்கால அமைச்சரவையில் தமிழ் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு!

“நாங்கள் இலங்கை அரசாங்கத்தை உருவாக்க விரும்புகிறோம். சிங்கள அரசாங்கத்தை அல்ல” என்று சமரசிங்க கூறினார். 

செப்டெம்பர் 13, 2024 - 23:08
NPP இடைக்கால அமைச்சரவையில் தமிழ் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றவுடன், பரந்த இலங்கை அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க முடியும் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சமரசிங்க, வடக்கு மற்றும் கிழக்கின் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்கள் மற்றும் பெருந்தோட்டத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தேசிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

“நாங்கள் இலங்கை அரசாங்கத்தை உருவாக்க விரும்புகிறோம். சிங்கள அரசாங்கத்தை அல்ல” என்று சமரசிங்க கூறினார். 

"அரசாங்கம் அல்லாத எம்.பி.க்களும் அமைச்சரவையில் நியமிக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்கும்” என்றார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களில் வடக்கு, கிழக்கு மற்றும் தோட்டத் துறைகளைச் சேர்ந்த நல்ல பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாகவும், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு அவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் சமரசிங்க தெரிவித்தார்.

“ஆரம்பத்தில் எமது அமைச்சரவையில் அனுரகுமார உட்பட நான்கு பேர் இருப்பார்கள். விவாதங்களுக்குப் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அமைச்சரவை ஏழு அல்லது எட்டு உறுப்பினர்களாக விரிவாக்கப்படலாம்" என்று அவர் மேலும் கூறினார். (நியூஸ்21)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!