கொழும்பு பங்குச் சந்தை பெயரில் ரூ.17 மில்லியனுக்கும் அதிக மோசடி: குற்றப் புலனாய்வு விசாரணை தீவிரம்
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்த மோசடி செயல்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், ஒரு போலி கையடக்க செயலி (Mobile App) மூலமாகவே பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) பெயர் மற்றும் அதிகாரப்பூர்வ முத்திரையை தவறாகப் பயன்படுத்தி, முதலீட்டாளர்களிடமிருந்து 17 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான தொகை மோசடியாகப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மோசடியுடன் தொடர்புடைய ஒரு போலி நிறுவனம் குறித்து, குற்றப் புலனாய்வு துறைக்கு அதிகாரப்பூர்வ முறைப்பாட்டை கொழும்பு பங்குச் சந்தை அளித்துள்ளது. குறித்த நிறுவனம், பங்குச் சந்தையில் பதிவுசெய்யப்பட்ட சட்டபூர்வ நிதி நிறுவனம் போல நடித்து, பங்குச் சந்தை முதலீடுகள் மற்றும் நிதி ஆலோசனை சேவைகள் வழங்குவதாக முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்த மோசடி செயல்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், ஒரு போலி கையடக்க செயலி (Mobile App) மூலமாகவே பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதுவரை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. எனினும், குற்றப் புலனாய்வு துறை விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், முதலீட்டாளர்கள் எந்தவொரு முதலீட்டையும் மேற்கொள்வதற்கு முன், சம்பந்தப்பட்ட நிறுவனம், கொழும்பு பங்குச் சந்தை மற்றும் பத்திரப் பரிவர்த்தனை ஆணையகம் (SEC) ஆகியவற்றில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை கட்டாயமாகச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.