டித்வா புயலால் இலங்கையில் எதிர்பாராத அளவில் குவிந்த குப்பைகள்

இந்த பேரிடரால் உருவான குப்பைகளை முழுமையாக மேலாண்மை செய்ய குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும்.

டிசம்பர் 9, 2025 - 12:40
டித்வா புயலால் இலங்கையில் எதிர்பாராத அளவில் குவிந்த குப்பைகள்

“டித்வா” சூறாவளியின் தாக்கத்தால் இலங்கையில் எதிர்பாராத அளவில் குப்பைகள் உருவாகியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.

இந்த புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள், கடைகள் மற்றும் பொது இடங்களில் பெருமளவில் குப்பைகள் உருவாகியுள்ளன. இவை தற்போது அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இதுவரை, பேரிடரால் ஏற்பட்ட குப்பைகளின் மொத்த அளவை சரியாக மதிப்பிட முடியவில்லை என்று பேராசிரியர் தெரிவித்தார். சில பகுதிகளை அடைவதில் சிரமம், வீதிகள் சேதமடைந்திருப்பது, சுத்தம் செய்யும் பணிகளில் ஏற்பட்ட தாமதம் போன்ற நடைமுறை சவால்கள் காரணமாக இந்த மதிப்பீடு தாமதமாகியுள்ளது.

இந்த பேரிடரால் உருவான குப்பைகளை முழுமையாக மேலாண்மை செய்ய குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும் என்று அவர் எச்சரித்துள்ளார். குறிப்பாக, மலையகத்தின் சில பகுதிகளில் வீதிகள் இன்னும் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு இல்லாததால், அங்கிருந்து குப்பைகளை அகற்றுவது கடினமாக உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், உள்ளூர் அதிகாரிகள் குப்பைகளை மேலாண்மை செய்ய தளர்வான வழிகாட்டுதல்கள் மற்றும் அளவுகோல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டார். ஏனெனில், இது சாதாரண குப்பை அல்ல—பேரிடரால் உருவான பெரும் அளவிலான கழிவுப் பொருட்கள் என்பதால், ஒரே நேரத்தில் அவற்றை முழுமையாக கையாள முடியாது என்றும் அவர் விளக்கினார்.

தற்காலிகமாக, இக்குப்பைகள் பாதுகாப்பான இடங்களில் சேமிக்கப்பட்டு, பின்னர் முறையான அகற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும், புயலால் சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகளின் கழிவுகளை, புவியியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகம் (Geological and Mining Bureau) அங்கீகரித்த இடங்களில் மட்டுமே அப்புறப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!