நாட்டில் இன்றும் மழை: 34 பிரதான நீர்நிலைகள் வான் பாய்கின்றன
தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (20) மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மேலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
மேலே குறிப்பிட்ட பகுதிகளில் காலை நேரத்தில் பனிமூட்டமான வானிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
தற்போது நாட்டின் 34 பிரதான குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் வெள்ள அபாய நிலையை எதிர்கொண்டு வான்பாய்ந்து வருகின்றன. அநுராதபுரம் மாவட்டத்தில் கலாவெவ, ராஜாங்கனை, நாச்சிதூவ மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலன்னறுவை மாவட்டத்தில் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகளில் ஒன்று நேற்று இரவு திறக்கப்பட்டு, விநாடிக்கு 1,500 கன அடி நீர் அம்பன்கங்கைக்கு வெளியேற்றப்படுகிறது.
கண்டி மாவட்டத்தில் பொல்கொல்ல, விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரன்தம்பே நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில் கொண்டுவட்டுவான் குளம் வான்பாய்வதால் அம்பாறை - இங்கினியாகலை வீதி நீரில் மூழ்கியுள்ளது.