ருத்ர தாண்டவமாடிய இஷான் கிஷன் – சூர்யகுமார்: 2வது டி20 போட்டியிலும் இந்தியா அபார வெற்றி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஜனவரி 24, 2026 - 09:09
ருத்ர தாண்டவமாடிய இஷான் கிஷன் – சூர்யகுமார்: 2வது டி20 போட்டியிலும் இந்தியா அபார வெற்றி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி ரசிகர்களுக்கு பரபரப்பான அதிரடி ஆட்டமாக அமைந்தது. நாக்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 47 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 44 ரன்களும் எடுத்து முக்கிய பங்காற்றினர்.

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி தொடக்கத்தில் தடுமாறியது. இளம் வீரர் அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார். தொடர்ந்து சஞ்சு சாம்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது.

இந்த நிலையில் களமிறங்கிய இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இணை நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தது. இருவரும் அதிரடி ஷாட்டுகளை மழைபோல் பொழிந்து, போட்டியின் போக்கையே மாற்றினர். குறிப்பாக இஷான் கிஷன் ருத்ர தாண்டவம் ஆடி, வெறும் சில பந்துகளிலேயே அரைசதம் கடந்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 122 ரன்கள் சேர்த்த நிலையில், இஷான் கிஷன் 32 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது இன்னிங்ஸில் பல பவுண்டரிகளும் சிக்ஸர்களும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் அரைசதம் கடந்து, இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இறுதியில், இந்திய அணி 15.2 ஓவர்களிலேயே 209 ரன்கள் எடுத்து அபார வெற்றியைப் பதிவு செய்தது. சூர்யகுமார் யாதவ் 82 ரன்களுடனும், ஷிவம் துபே 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி20 தொடரில் 2–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!