வங்கி மற்றும் பொலிஸாரின் பெயரில் நடைபெறும் மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை
சில மோசடிக்காரர்கள் வட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் மூலம் மூத்த பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து, பொலிஸ் சீருடையில் தோன்றுவதும் பதிவாகியுள்ளது.
வங்கி மற்றும் பொலிஸ் அதிகாரிகள் எனப் பெயரிட்டு நடைபெறும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (Sri Lanka CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் காரணமாக கடன் அட்டைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறி வரும் போலி குறுஞ்செய்தி மற்றும் இணையத்தள அறிவிப்புகள் குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.
பிரபல வங்கிகளின் பெயர்களை பயன்படுத்தி அனுப்பப்படும் இச்செய்திகளில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்து, அட்டைகளை மீண்டும் செயல்படுத்த NIC எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு கேட்கப்படுகின்றது.
மேலும், 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அட்டை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என தெரிவித்து, பின்னர் OTP-களைப் பெறுவதன் மூலம் வங்கி கணக்குகளில் உள்நுழைந்து பணத்தை திருடுகின்றனர் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு சுட்டிக்காட்டியுள்ளதுஃ
இதேபோல், சில மோசடிக்காரர்கள் வட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் மூலம் மூத்த பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து, பொலிஸ் சீருடையில் தோன்றுவதும் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் NIC விவரங்களை பயன்படுத்தி குற்றவாளிகள் கடன் அட்டைகள் பெற்றதாகவும், மோசடிகள் நடந்ததாகவும் கூறி கைது செய்வோம் என அச்சுறுத்தி, பெரிய தொகைகளை பெற்றுக்கொள்ளவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறான அழைப்புகள் அல்லது குறுஞ் செய்திகளின் மூலம் பெறும் தகவலுக்கு அமைய NIC எண்கள், அட்டை விவரங்கள், கடவுச்சொற்கள், OTP போன்றவற்றை பகிர வேண்டாம் என்றும், சந்தேகமான கோரிக்கைகளை அதிகாரப்பூர்வ வங்கி அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தொடர்பு விவரங்கள் மூலம் நேரடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், இவ்வகை மோசடிகளை உடனடியாக வங்கிகளுக்கு அறிவிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய நுணுக்கமான மோசடிகளால் ஏற்படும் நிதி இழப்புகளைத் தவிர்க்க விழிப்புணர்வும் எச்சரிக்கையும் அவசியம் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு மக்களுக்க நினைவூட்டியுள்ளது. (News21)