விராட் கோலியின் சதம் வீண்… இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்து தொடரை வென்ற நியூசிலாந்து
முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1–1 என்ற சமநிலையில் இருந்தன.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வந்தது. முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1–1 என்ற சமநிலையில் இருந்தன. இதனால் தொடரின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த இறுதிப் போட்டி இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. டெவான் கான்வே 5 ரன்களிலும், நிக்கோலஸ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வில் யங் 30 ரன்களில் வெளியேறினார்.
ஆனால் அதன் பின்னர் களமிறங்கிய Daryl Mitchell மற்றும் Glenn Phillips இந்திய பந்துவீச்சை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருவரும் பொறுப்புடன் அதே நேரத்தில் அதிரடியாக விளையாடி பவுண்டரி, சிக்சர்களால் ரன்களை குவித்தனர். நிலைத்து ஆடிய இந்த ஜோடி சதம் விளாசி அசத்த, மிட்சேல் 137 ரன்களிலும், பிலிப்ஸ் 106 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ராணா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
338 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் அதிர்ச்சி அளித்தது. Rohit Sharma 11 ரன்களிலும், Shubman Gill 23 ரன்களிலும் வெளியேறினர். தொடர்ந்து Shreyas Iyer 3 ரன்களிலும், KL Rahul 1 ரன்னிலும் ஆட்டமிழந்ததால் இந்திய அணி தடுமாறியது.
இந்த இக்கட்டான நிலையில் Virat Kohli ஒரு முனையில் பொறுப்புடன் நிலைத்து ஆடினார். அவருக்கு துணையாக நிதீஷ் ரெட்டி சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். பின்னர் களமிறங்கிய ஹர்ஷித் ராணா அதிரடியாக விளையாட, கோலி – ராணா கூட்டணி இந்தியாவின் ரன் வேகத்தை உயர்த்தியது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி சதமடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ராணா 52 ரன்களில் வெளியேற, இந்தியாவின் நம்பிக்கையாக இருந்த கோலி 124 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கோலியின் விக்கெட்டுடன் இந்திய அணியின் வெற்றி கனவும் மங்கியது. இறுதியில் இந்திய அணி 46 ஓவர்களில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2–1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. விராட் கோலியின் போராட்டமான சதமும் இந்த போட்டியில் இந்தியாவுக்கு வெற்றியைத் தர போதுமானதாக அமையவில்லை.

