டெல்லி கெபிடல்ஸ் அணியில் இயன் பெல் இணைவு – 2026 ஐபிஎல் முன் முக்கிய மாற்றம்
இங்கிலாந்து தேசிய அணிக்காக 118 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட இயன் பெல், ஐபிஎல் தொடரில் பணியாற்றுவது இதுவே முதல் முறையாகும்.
2026ஆம் ஆண்டுக்கான Indian Premier League தொடரை முன்னிட்டு Delhi Capitals அணி தனது பயிற்சியாளர் அணியில் முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் Ian Bell அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து தேசிய அணிக்காக 118 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட இயன் பெல், ஐபிஎல் தொடரில் பணியாற்றுவது இதுவே முதல் முறையாகும். தன்னுடைய திறமையான துடுப்பாட்டத்திற்காக உலக கிரிக்கெட்டில் தனித்த இடத்தைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், அவர் இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். மேலும், 2024ஆம் ஆண்டு இலங்கை அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். 2023 உலகக் கிண்ணத் தொடரின் போது நியூசிலாந்து அணியுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.
அதேபோல், தி ஹண்ட்ரட் தொடரில் பர்மிங்காம் பீனிக்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். பல்வேறு சர்வதேச அணிகளுடன் பணியாற்றிய அனுபவம், டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு புதிய துடுப்பாட்டத் தந்திரங்களை உருவாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், போட்டி அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.