மிரட்டிய இஷான் கிஷான்: வரலாற்று இரட்டை சதம் விளாசி சாதனை.. கிழக்கு மண்டலம் 708 ஓட்டங்கள் குவித்து இமாலய சாதனை!
செய்தி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் துலீப் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், கிழக்கு மண்டல அணி மற்றும் தெற்கு மண்டல அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஐந்து நாட்கள் கொண்ட இப்போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் கிழக்கு மண்டல அணி 4 விக்கெட்டுகளை இழந்து 385 ஓட்டங்களைக் குவித்திருந்தது. களத்தில் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் இஷான் கிஷான் 111 ஓட்டங்களுடனும், குமார் குஷாக்ரா 63 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் அபாரமாக ஆடிய குமார் குஷாக்ரா, 128 பந்துகளில் தனது சதத்தைப் பதிவு செய்தார். ஐந்தாவது விக்கெட்டுக்காக இஷான் கிஷான் - குஷாக்ரா ஜோடி 230 ஓட்டங்களைச் சேர்த்து தெற்கு மண்டல அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இதில் 5 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உட்பட 101 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் குஷாக்ரா ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அதிரடி காட்டிய இஷான் கிஷான், தேவ்தத் படிக்கல்லின் பந்தை பவுண்டரிக்கு விரட்டி முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் தனது 2வது இரட்டை சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய அவர் 250 ஓட்டங்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக தற்காலிகமாக ஓய்வு (Retired Hurt) பெற்றார்.
பின்னர் களமிறங்கிய அனுகுல் ராய் 45 ஓட்டங்களும், மொஹமட் ஷமி 28 ஓட்டங்களும், மொஹமட் குரேஷி 40 ஓட்டங்களும் எடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். மீண்டும் களம் கண்ட இஷான் கிஷான், 7 சிக்ஸர்கள், 30 பவுண்டரிகள் உட்பட 270 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். முடிவில் கிழக்கு மண்டல அணி தனது முதல் இன்னிங்ஸில் 708 ஓட்டங்களைக் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தெற்கு மண்டல அணி தரப்பில் திரிபுரணா விஜய் 4 விக்கெட்டுகளையும், மிலிந்த் மற்றும் ஷ்ரேயாஸ் கோபால் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் 270 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம், துலீப் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் குவித்த விக்கெட் காப்பாளர் என்ற புதிய சாதனையை கிழக்கு மண்டல அணியின் தலைவர் இஷான் கிஷான் படைத்துள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு மொஹாலியில் நடைபெற்ற போட்டியில், மத்திய மண்டல அணிக்காக விளையாடிய விக்கெட் காப்பாளர் நமன் ஓஜா 217 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.