இலங்கை கிரிக்கெட்டில் இரட்டை மகிழ்ச்சி: இறுதிப் போட்டிக்குள் இலங்கை ஏ அணி – மகளிர் அணிக்கு சம்பியன் பட்டம்
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில், இலங்கை ஏ அணியும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.
கட்டாரின் தோஹாவில் நடைபெற்ற ஆசியக் கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய ஏ அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை ஏ அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
மறுபுறம், ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஜ்மானில் நடைபெற்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கான ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அயர்லாந்தை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி சம்பியன் பட்டத்தைச் சுவீகரித்துள்ளது.
இந்திய அணிக்கு எதிராக இலங்கை ஏ அணி அபார வெற்றி
அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 317 ஓட்டங்களைக் குவித்தது.
இந்திய அணி சார்பில் அபிஷேக் சர்மா 63 பந்துகளில் 78 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். அணித்தலைவர் திலக் வர்மா 66 பந்துகளில் 53 ஓட்டங்களையும், ஷாபாஸ் அஹமட் ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.
வைபவ் சூர்யவன்ஷி 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை ஏ அணியின் பந்துவீச்சில் ஜனித் லியனகே, நிபுன் தனஞ்சய மற்றும் ரவிந்து பெர்னாண்டோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இரட்டைச் சதங்களால் வலுப்பெற்ற இலங்கை அணி
318 ஓட்டங்கள் என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி, ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 85 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை அணிக்கு, லசித் குரூஸ்புள்ளே மற்றும் சினெத் ஜயவர்தன ஆகியோர் முதலாவது விக்கெட்டுக்காக 174 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
சினெத் ஜயவர்தன 10 பௌண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கலாக 70 பந்துகளில் 105 ஓட்டங்களைக் குவித்தார்.
மறுமுனையில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய லசித் குரூஸ்புள்ளே 107 பந்துகளில் 118 ஓட்டங்களைப் பெற்றார். அவரது இன்னிங்ஸில் 12 பௌண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கியிருந்தன.
நிஷான் மதுஷ்க ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
அணித்தலைவர் பவன் ரத்நாயக்க 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களைப் பெற்றார்.
மதுஷ்க மற்றும் ரத்நாயக்க ஆகியோர் பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 53 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இதன்மூலம் இலங்கை ஏ அணி 41.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 318 ஓட்டங்களைப் பெற்று, இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தியது.
தோல்வியின்றி சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை மகளிர் அணி
2026ஆம் ஆண்டுக்கான வளர்ந்துவரும் நாடுகளுக்கான ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் கிண்ணத் தொடரில் இலங்கை மகளிர் அணி பங்கேற்ற எட்டுப் போட்டிகளிலும் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அஜ்மானில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அயர்லாந்து மகளிர் அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை அணி, தொடரில் தனது தோல்வியற்ற சாதனையைத் தக்கவைத்துக்கொண்டது.
இலங்கை அணியின் பதில் அணித்தலைவர் ஹர்ஷிதா சமரவிக்ரம, இந்த வெற்றியானது அணியின் அனைத்து வீராங்கனைகளினதும் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த பலன் எனத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வீராங்கனையும் தமக்குரிய பொறுப்பைப் புரிந்துகொண்டு, நம்பிக்கையுடன் தொடர்ச்சியாகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
விஷ்மி குணரத்ன, சத்யா சந்தீபனி ஆகியோரின் சாதனை
இத்தொடரில் 324 ஓட்டங்களைக் குவித்த இலங்கையின் விஷ்மி குணரத்ன, அதிக ஓட்டங்களைப் பெற்ற வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
சுழற்பந்துவீச்சாளரான சத்யா சந்தீபனி 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அயர்லாந்தின் காரா முர்ரேயுடன் தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீராங்கனை என்ற சிறப்பைப் பகிர்ந்துகொண்டார்.
இறுதிப் போட்டியில் வெறும் 13 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சந்தீபனி, போட்டியின் சிறந்த வீராங்கனையாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.
2020ஆம் ஆண்டில் ஒரேயொரு சர்வதேசப் போட்டியில் விளையாடியிருந்த சந்தீபனி, இலங்கை ஏ அணிக்காக வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தினால் மீண்டும் வாய்ப்பைப் பெற்றிருந்தார்.
தனது கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், தனது முன்னேற்றத்திற்கு ஆதரவளித்த குடும்பத்தினருக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இறுதிப் போட்டியில் தமது அணி எதிர்பார்த்த அளவுக்குச் செயற்படவில்லை என அயர்லாந்து அணித்தலைவி கேபி லூயிஸ் தெரிவித்துள்ளதுடன், இத்தொடரின் அனுபவங்கள் எதிர்காலப் போட்டிகளுக்குப் பயனுள்ளதாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஏ அணியின் இறுதிப் போட்டிக்கான தகுதியும், மகளிர் அணியின் தோல்வியற்ற சம்பியன் பட்ட வெற்றியும் இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனைகளாக அமைந்துள்ளன.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.