பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை பலப்பரீட்சை
டுபாயில் நடைபெற்று வரும் 10-வது பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், தாய்லாந்து, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா ஆகிய 8 அணிகள் இரு பிரிவுகளாகப் பங்கேற்றன.
லீக் சுற்றுகளின் முடிவில் குரூப் ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும், குரூப் பி பிரிவிலிருந்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
தொடர்ந்து நடைபெற்ற முதல் அரையிறுதியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இந்தியாவும், இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான இலங்கை அணி கோப்பையைத் தக்கவைக்கவும், இதுவரை 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி 8-வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றவும் களமிறங்குவதால் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.