2027 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு: இந்தியா, பாகிஸ்தான் மீண்டும் ஒரே குழுவில் மோதல்

2027ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம்பிடித்துள்ளன.

2027 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு: இந்தியா, பாகிஸ்தான் மீண்டும் ஒரே குழுவில் மோதல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான உத்தியோகபூர்வ போட்டி அட்டவணையை கேப் டவுனில் நேற்று வெளியிட்டுள்ளது. தென்னாபிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிக்கெட் திருவிழா, 2027 அக்டோபர் 2ஆம் திகதி முதல் நவம்பர் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

கிரிக்கெட் இரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தத் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி ஜோஹன்னஸ்பேர்க்கில் உள்ள புகழ்பெற்ற வாண்டரர்ஸ் மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இத்தொடரில் களம் காணும் அணிகள் இரண்டு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குழு ஏ பிரிவில் முன்னாள் சம்பியனான இந்தியா, ஆறு முறை உலகக் கிண்ணத்தை வென்ற பலம் வாய்ந்த அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இணைப் புரவலரான ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. 

இவற்றுடன் தகுதிச் சுற்று மூலமாகத் தேர்வாகும் மேலும் ஒரு அணியும் இந்தப் பிரிவில் இணையவுள்ளது. இதன் மூலம் பரம வைரிகளான இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் உலகக் கிண்ண லீக் சுற்றிலேயே மீண்டும் நேருக்கு நேர் மோதும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது.

அதேவேளை குழு பி பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகளுடன் தகுதிச் சுற்று வழியாக முன்னேறும் மற்றொரு அணியும் போட்டியிடவுள்ளது. இம்முறை போட்டியை மேலும் விறுவிறுப்பாக்கும் வகையில் மூன்று கட்டங்களைக் கொண்ட முற்றிலும் புதிய போட்டி வடிவமைப்பை ஐசிசி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

முதல் கட்டமாக சூப்பர் சீரிஸ் சுற்றில், தகுதி பெற்றுள்ள 14 அணிகளில் சர்வதேச தரவரிசையில் பின்தங்கியுள்ள மூன்று அணிகள் தங்களுக்குள் பலப்பரீட்சை நடத்தும். இதில் முதலிடத்தைப் பிடிக்கும் ஒரு அணி பிரதான 12 அணிகள் பங்குபற்றும் லீக் சுற்றுக்கு முன்னேறும். 

அதனைத் தொடர்ந்து ஆரம்பமாகும் லீக் சுற்றில் 12 அணிகள் தலா ஆறு அணிகள் கொண்ட இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 30 போட்டிகளில் விளையாடும். ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் அணிகளும், இரு குழுக்களையும் ஒப்பிட்டு அடுத்த சிறந்த இடத்தைப் பெறும் ஓர் அணியும் என மொத்தம் ஏழு அணிகள் 'சூப்பர் 7' சுற்றுக்குத் தகுதிபெறும்.

இரண்டாம் கட்டமான சூப்பர் 7 சுற்றில் மொத்தம் 21 போட்டிகள் நடைபெறும். இச்சுற்றின் நிறைவில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் வெற்றிபெறும் இரண்டு அணிகள் ஜோஹன்னஸ்பேர்க்கில் இறுதிப் போரில் மோதும். 

இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் மொத்தம் 12 மைதானங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதோடு, ஆபிரிக்க நாடான நமீபியா தனது வரலாற்றில் முதல்முறையாக உலகக் கிண்ணப் போட்டிகளை ஏற்று நடத்தவுள்ளமை விசேட அம்சமாகும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT