பா.ஜ.க.வை எதிர்க்க விஜய் அச்சப்படுகிறார்: ‘ஜனநாயகன்’ விவகாரத்தில் திருமாவளவன் குற்றச்சாட்டு
‘ஜனநாயகன்’ திரைப்படத்தை முடக்குவதில் அரசியல் அழுத்தம் இருப்பதாகப் பேசப்பட்டு வரும் நிலையில், உண்மையில் பாரதிய ஜனதா கட்சி தலையீடு இருந்தால், அதை விஜய் வெளிப்படையாகக் கூற வேண்டியிருந்தது என திருமாவளவன் தெரிவித்தார்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து எழுந்துள்ள சர்ச்சை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இது குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிடுவதில் அரசியல் தலையீடு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது, அவர் நடிகரும் அரசியல் பிரவேசம் செய்தவருமான விஜய் மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை வைத்தார்.
‘ஜனநாயகன்’ திரைப்படத்தை முடக்குவதில் அரசியல் அழுத்தம் இருப்பதாகப் பேசப்பட்டு வரும் நிலையில், உண்மையில் பாரதிய ஜனதா கட்சி தலையீடு இருந்தால், அதை விஜய் வெளிப்படையாகக் கூற வேண்டியிருந்தது என திருமாவளவன் தெரிவித்தார். ஆனால் இந்த விவகாரத்தில் விஜய் தொடர்ந்து மௌனம் காத்து வருவது பல சந்தேகங்களை எழுப்புகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
விஜயை பேச விடாமல் தடுப்பது எது என்ற கேள்வி எழுகிறது என கூறிய திருமாவளவன், நீதிமன்றங்கள் மட்டுமே அழுத்தம் கொடுக்கிறதா அல்லது பா.ஜ.க.வும் சேர்ந்து அவரது திரைப்படம் வெளியாகாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறதா என்பதற்கு விஜயே பதில் சொல்ல வேண்டும் என்றார். ஆனால் தற்போது தெளிவாகத் தெரிகிற ஒன்று, பா.ஜ.க.வையோ அல்லது மோடி அரசையோ வெளிப்படையாக எதிர்க்க விஜய் தயாராக இல்லை; அதற்குக் காரணம் அச்சம் தான் என அவர் குற்றம்சாட்டினார்.
இந்த அச்சம் எதனால் ஏற்பட்டது என்பதை மக்களிடம் தெளிவுபடுத்தினால் மட்டுமே விஜயின் அரசியல் எதிர்காலம் உறுதியடையும் என்றும் திருமாவளவன் கூறினார். மேலும், விஜயை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், அவருக்கு வியூகம் வகுக்கும் சிலர் கூட பா.ஜ.க.வின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக தகவல்கள் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அழுத்தங்களுக்கு உட்பட்டு பா.ஜ.க. கூட்டணியில் விஜய் இணைந்தால், அவரது அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறியாகும் என்றும், விஜய்க்கு பா.ஜ.க. தரப்பில் இருந்து நெருக்கடி இருப்பதை யாரும் மறுக்க முடியாது என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையாத கட்சிகளுக்கு எதிராக பா.ஜ.க. மிரட்டல் அரசியலை கையாண்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த கருத்துகள் தமிழக அரசியல் சூழலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளன; குறிப்பாக விஜயின் அரசியல் நிலைப்பாடு மற்றும் எதிர்கால முடிவுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.