மத்திய கிழக்கில் பெரிய அளவிலான ராணுவ ‘தயார்நிலை’ பயிற்சிகளை தொடங்கிய அமெரிக்கா
அவசர சூழ்நிலைகளில் பணியாளர்கள் மற்றும் போர் விமானங்களை பல்வேறு மாற்று தளங்களுக்கு அனுப்பும் நடைமுறைகள் சரியாக செயல்படுகிறதா என்பதையும் இந்த பயிற்சிகள் மூலம் சோதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பகுதிகளில் அமெரிக்கா பல நாட்கள் நீடிக்கும் பெரிய அளவிலான ராணுவ பயிற்சிகளை தொடங்கியுள்ளது. இந்த ‘தயார்நிலை’ (readiness) பயிற்சிகள், ஈரானுடன் நிலவி வரும் பதற்றமான சூழலின் பின்னணியில் நடைபெறுகின்றன.
அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட்டரம்ப், “ஈரானை நோக்கி இன்னொரு கடற்படை படை அணிவகுப்பு தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறது” என கூறி, கூடுதல் கடற்படை கப்பல்கள் அனுப்பப்படுவதை அறிவித்துள்ளார்.
அமெரிக்க விமானப்படையின் மத்திய கட்டுப்பாட்டு பிரிவு (US Air Forces Central – AFCENT) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இந்த பயிற்சிகள் போர்திறன் கொண்ட விமானங்களை மிக வேகமாக நிலைநிறுத்தி, தொடர்ந்து செயல்படுத்தும் அமெரிக்க திறனை வெளிப்படுத்துவதற்காக நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.
அவசர சூழ்நிலைகளில் பணியாளர்கள் மற்றும் போர் விமானங்களை பல்வேறு மாற்று தளங்களுக்கு அனுப்பும் நடைமுறைகள் சரியாக செயல்படுகிறதா என்பதையும் இந்த பயிற்சிகள் மூலம் சோதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், பெயர் குறிப்பிடப்படாத “கூட்டணி நாடுகள்” உடன் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பை உறுதி செய்வதும் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்த பயிற்சிகள், மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவத்தின் செயல்திறன் மற்றும் தயார் நிலையை வெளிப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
AFCENT தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டெரிக் ஃபிரான்ஸ், “எங்கள் விமானப்படையினர் எப்போதும் போருக்கு தயாராக இருப்பதை உறுதி செய்வதும், தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் விமான சக்தியை பயன்படுத்துவதற்கான ஒழுங்கான செயல்பாடுகளைப் பராமரிப்பதும் தான் இந்த பயிற்சிகளின் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ராணுவ நடவடிக்கைகள், அமெரிக்கா மற்றும் Iran இடையேயான அரசியல் மற்றும் ராணுவ பதற்றம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலையில் இடம்பெறுவதால், உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன.