கொழும்பு பஸ் சாரதிகளில் 60% பேர் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
விபத்துகள் தொடர்பான விசாரணைகளில், சுமார் பாதி விபத்துகளுக்கு சாரதிகளே காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த சாரதிகளில் பெரும்பாலானோர் மதுபானம் அல்லது போதைப் பொருட்களை பயன்படுத்தியிருந்ததாகவும் அமைச்சர் விளக்கினார்.
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகளில் சுமார் 60 சதவீதம் பேர் கடுமையான போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற விசேட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.
2025ஆம் ஆண்டில் மட்டும் 2,700 வீதி விபத்துகள் பதிவாகி, அதில் 2,700 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் சுமார் 2,000 பேர் பாதசாரிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னிருக்கை பயணிகள் எனவும், உயிரிழந்தவர்களில் 53 சதவீதம் ஆண்கள் எனவும் அவர் கூறினார்.
விபத்துகள் தொடர்பான விசாரணைகளில், சுமார் பாதி விபத்துகளுக்கு சாரதிகளே காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த சாரதிகளில் பெரும்பாலானோர் மதுபானம் அல்லது போதைப் பொருட்களை பயன்படுத்தியிருந்ததாகவும் அமைச்சர் விளக்கினார். பஸ் சங்கங்களின் தகவலின்படி, சாரதிகளில் சுமார் 60 சதவீதம் பேர் போதைப் பொருட்களுக்கு அடிமையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெஸ்டியன் மாவத்தை பகுதியில் நடமாடும் பரிசோதனை அலகுகள் மூலம் 53 சாரதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், 10 பேர் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இருப்பினும், சோதனைகளுக்குப் பிறகு பல சாரதிகள் பணிக்கு வராமல் தவிர்த்ததால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
போதைப் பழக்கத்திலிருந்து விடுபட விரும்பும் சாரதிகளுக்கு மறுவாழ்வு சிகிச்சை வழங்கப்படும் என்றும், அதனை மறுக்கும் சாரதிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், முறையான பயிற்சி மற்றும் சிறப்பு அனுமதி பெறாமல் இனி எந்த சாரதிகளுக்கும் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட அனுமதி வழங்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.