நாட்டில் கனமழை: உடுதும்பரையில் அதிக மழைவீழ்ச்சி – நீர்த்தேக்கங்கள் வான்பாய்கின்றன

34 பிரதான குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருவதாகவும், அதில் அநுராதபுரம், கண்டி, குருநாகல் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள முக்கிய நீர்த்தேக்கங்கள் அடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 19, 2025 - 10:22
நாட்டில் கனமழை: உடுதும்பரையில் அதிக மழைவீழ்ச்சி – நீர்த்தேக்கங்கள் வான்பாய்கின்றன

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (19) மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்கள், அதேபோல் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பதிவாகலாம் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடும். இதேவேளை, மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம். இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய சேதங்களை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மஹாவலி ஆற்றை ஒட்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்மட்ட நீர்த்தேக்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிக்கந்தை, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகலை பகுதிகளில் வசிக்கும் மக்கள் விசேட அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மட்டக்களப்பு–பொலன்னறுவை வீதியின் கல்லேல்ல பகுதி, சோமாவதி ராஜமஹா விகாரைக்கு செல்லும் பிரவேச வீதி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் அந்தப் பகுதிகளுக்கு செல்லும் பக்தர்களும், மஹாவலி ஆற்றிற்கு அருகில் வசிக்கும் பொதுமக்களும் அதிக கவனத்துடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி உடுதும்பரை பகுதியில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்த பகுதியில் 201 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், உடுதும்பரை பொத்தபிட்டிய பகுதியில் 155 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது.

34 பிரதான குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருவதாகவும், அதில் அநுராதபுரம், கண்டி, குருநாகல் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள முக்கிய நீர்த்தேக்கங்கள் அடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மண் சரிவு உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக பதுளை, மாத்தளை, கிளிநொச்சி, கேகாலை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலுள்ள சில வீதிகள் முழுமையாகத் தடைப்பட்டுள்ளதுடன், பொலன்னறுவை சுங்கவில–சோமாவதி வீதிப் போக்குவரத்தும் வெள்ளம் காரணமாக தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!