தனது முதல் ஹீரோவுடன் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மீனா!
1982ஆம் ஆண்டு சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தொண்ணூறுகளில் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வந்தார்.

குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை மீனா. பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், பின்னர் அவர் ஹீரோயின் ஆனார். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய காந்த், பிரபு உட்பட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அவர், தெலுங்கு, மலையாளத்திலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
இப்போது, தமிழ், மலையாளம், தெலுங்கில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் அவர், நாயகியாக அறிமுகமானது, ‘நவயுகம்’ என்ற தெலுங்கு படத்தில். இதில் ஹீரோவாக, ராஜேந்திர பிரசாத் நடித்திருந்தார். கே.ஆதித்யா இயக்கிய இந்தப் படம் 1990 ஆம் ஆண்டு வெளியானது.
இந்நிலையில், இந்தப் படம் வெளியாகி 32 வருடங்கள் ஆன நிலையில், தனது முதல் ஹீரோ ராஜேந்திர பிரசாத்துடன் மீண்டும் இணைந்துள்ளார் நடிகை மீனா. தெலுங்கு படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர்.
ராஜேந்திர பிரசாத்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை மீனா, இதைத் தெரிவித்துள்ளார். அந்தப்படம் பற்றிய விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.