பல ஆண்டுகளுக்கு பின்னர் களமிறங்கும் சிவாவின் சுமோ!
ஆறு ஆண்டுகள் கழித்து இம்முறை ஏப்ரல் 25ஆம் தேதி சுமோ திரைப்படம் கண்டிப்பாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 12 ஆண்டுகள் கழித்து வெளியான சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படத்தின் வெற்றி, இதே போன்று பல ஆண்டுகளாக ரிலீஸ் செய்யப்படாமல் இருக்கும் பல படங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது.
தொடர்ந்து விக்ரமின் ’துருவ நட்சத்திரம்’ போன்று பல ஆண்டுகளாக வெளியாகுமா இல்லையா என தெரியாமல் இருந்த படங்கள் இந்த ஆண்டே ரிலீஸ் செய்யப்படுவதாக கூறி வந்தனர்.
இந்நிலையில் இந்த வரிசையில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள ’சுமோ’ திரைப்படம் இணைந்துள்ளது. பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருக்கும் ’சுமோ’ திரைப்படமானது ஏப்ரல் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரித்துள்ள இத்திரைப்படம், 2019 ஆம் ஆண்டே படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரானது. அப்போதே படத்தின் டிரெய்லரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னும் பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்படு ஒத்தி வைக்கப்பட்டது.
கடைசியாக இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் வெளியாகலாம் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஆறு ஆண்டுகள் கழித்து இம்முறை ஏப்ரல் 25ஆம் தேதி சுமோ திரைப்படம் கண்டிப்பாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நடிகர் வடிவேலு பல வருடங்கள் கழித்து சுந்தர்.சியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 'சென்னை 28', 'தமிழ்ப்படம்' என வித்தியாசமான நகைச்சுவை நடிப்பால் தனக்கென தனி ரசிகர்களை பெற்றிருக்கும் மிர்ச்சி சிவாவுடன் 'வணக்கம் சென்னை' படத்திற்கு பிறகு இந்த படத்தில் இணைந்துள்ளார் பிரியா ஆனந்த்.
இவர்களுடன் யோசினோரி தசீரோ, விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடல் திரைப்படத்திற்கு பிறகு ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.பி.ஹோசிமின் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் ஜப்பானைச் சேர்ந்த சுமோ சண்டை கலைஞர் ஒருவர் நடித்துள்ளார். ஜப்பான் நாட்டின் கலையான சுமோ சண்டைக்கலை தொடர்பான கதையை முழுக்க முழுக்க நகைச்சுவையாக கூறியிருக்கும் படமாக ‘சுமோ’ உருவாகியுள்ளது. ஜப்பானுக்கே சென்று பிரதான காட்சிகளை படம்பிடித்துள்ளனர்.