குடும்பத்துடன் வெளிய கூட போக முடியல... விஜய் பொறுப்பல்ல, நாமெல்லோருமே பொறுப்பு! கரூர் சம்பவம் குறித்து நடிகர் அஜித் குமார் விளக்கம்!
கார் பந்தயப் போட்டிகளை முடித்துவிட்டு நாடு திரும்பிய நடிகர் அஜித் குமார், தனது பேட்டி ஒன்றில், அண்மையில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
கார் பந்தயப் போட்டிகளை முடித்துவிட்டு நாடு திரும்பிய நடிகர் அஜித் குமார், தனது பேட்டி ஒன்றில், அண்மையில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்தக் கூட்டம் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து அஜித் குமார் தனது மௌனத்தைக் கலைத்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலை வைத்து தமிழ்நாட்டில் நிறைய விஷயங்கள் நடந்தாலும், அந்த சம்பவத்திற்கு நடிகர் விஜய் மட்டும் பொறுப்பல்ல, நாமெல்லோருமே பொறுப்புதான் என்று அவர் தெரிவித்துள்ளார். ரசிகர்களின் எல்லையற்ற மற்றும் அளவு கடந்த அன்புதான் இதுபோன்ற எதிர்பாராத நிகழ்வுகளை உருவாக்குகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கூட்டத்தால் ஏற்படும் இந்த வெறித்தனம் ஒட்டுமொத்த சினிமா துறையையே தவறாகச் சித்தரிக்கிறது என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவங்கள் உருவாக ஊடகங்களின் பங்களிப்பையும் அஜித் குமார் சுட்டிக்காட்டியுள்ளார். திரைப்படங்களின் முதல் நாள் முதல் காட்சியைப் பற்றி ஊடகங்கள், ரசிகர்கள் இதையெல்லாம் செய்தார்கள் என்று மிகைப்படுத்திக் காட்டுவது, ரசிகர்களின் மனநிலையை மாற்றிவிடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்கள் வெறுமனே தங்கள் அன்பை மட்டும் வெளிப்படுத்தினால் போதும் என்றும் அஜித் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அன்புக்கு தான் எப்போதும் நன்றிக்கடன் பட்டு இருப்பதாக அஜித் குமார் கூறியுள்ளார். ஆனால், “அதே அன்பு காரணமாகத்தான் நான் குடும்பத்துடன் வெளியில் செல்வதில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“ரசிகர்களால் என் குடும்பத்துடன் நிம்மதியா வெளிய கூட போக முடியல”. என் மகனை கூட நான் பள்ளிக்கு கொண்டு சென்று விட முடியாத நிலை இருக்கிறது என்றும் அவர் கூறியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் அவரது தனிப்பட்ட வாழ்வில் அன்பு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சிந்திக்க வைத்துள்ளது.