வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை: சிசிடிவி காட்சிகள் ஆய்வு; 4 பொலிஸ் குழுக்கள் களத்தில்

வெலிகம பிரதேச சபைக்குள் வெள்ளை சட்டை அணிந்து கருப்பு நிற முகக்கவசத்துடன் ஒரு துப்பாக்கிதாரி வந்துள்ளார். அந்த துப்பாக்கிதாரி, உத்தியோகபூர்வ இருக்கையில் இருந்த தலைவர் லசந்த விக்ரமசேகரவை நான்கு முறை சுட்ட பின்னர், அங்கிருந்து மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும் விதம் பதிவாகியுள்ளது.

ஒக்டோபர் 23, 2025 - 11:33
வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை: சிசிடிவி காட்சிகள் ஆய்வு; 4 பொலிஸ் குழுக்கள் களத்தில்

வெலிகம (Weligama) பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த பிரதேச சபைத் தலைவர், மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று உயிரிழந்தார்.

கொலை நடந்த போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த விசாரணை தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் தலைமையில், நான்கு பொலிஸ் குழுக்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிகம பிரதேச சபைக்குள் வெள்ளை சட்டை அணிந்து கருப்பு நிற முகக்கவசத்துடன் ஒரு துப்பாக்கிதாரி வந்துள்ளார். அந்த துப்பாக்கிதாரி, உத்தியோகபூர்வ இருக்கையில் இருந்த தலைவர் லசந்த விக்ரமசேகரவை நான்கு முறை சுட்ட பின்னர், அங்கிருந்து மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும் விதம் பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் பிரதேச சபைத் தலைவரின் தலை, கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்படவில்லை.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!