நாரஹேன்பிட்டியில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் மரணம்: பொலிஸ் விசாரணை ஆரம்பம்
மரணம் சந்தேகத்திற்கிடமானதாகக் கருதப்படுவதால், மரணத்துக்கான காரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொழும்பு - நாரஹேன்பிட்டி பகுதியில் நபரொருவரின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிருல வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், நேற்று வெள்ளிக்கிழமை (19) மதியம் ஒருவர் உயிரிழந்து கிடந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
உயிரிழந்தவர், நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் தனியாக வசித்து வந்ததாகவும் நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மரணம் சந்தேகத்திற்கிடமானதாகக் கருதப்படுவதால், மரணத்துக்கான காரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நீதவான் விசாரணை மேற்கொள்ளப்படுவதற்காக சடலம் தற்போது சம்பவ இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாரஹேன்பிட்டி பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.