வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி மீது துப்பாக்கிச் சூடு
அறுவை சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த கைதியின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலையில் இன்று (31) காலை துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வைத்தியசாலையின் 14ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அறுவை சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த கைதியின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். காயமடைந்த கைதிக்கு உடனடியாக அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்ட விசாரணைகளின் படி, வைத்தியசாலை வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தையடுத்து வைத்தியசாலை வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சந்தேகநபரை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.