தீர்மானமிக்க நியூசிலாந்து -  இலங்கை டெஸ்ட் போட்டி... ஒரு பார்வை!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சேர்ச் நகரில் வியாழக்கிழமை (09) ஆரம்பமாகின்றது.

Mar 8, 2023 - 16:56
Mar 10, 2023 - 13:52
தீர்மானமிக்க நியூசிலாந்து -  இலங்கை டெஸ்ட் போட்டி... ஒரு பார்வை!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சேர்ச் நகரில் வியாழக்கிழமை (09) ஆரம்பமாகின்றது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளதுடன், இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி விளையாடுவதற்கு நியூசிலாந்து டெஸ்ட் தொடர் முக்கியத்தும் கொண்டதாக அமைகின்றது.

இரண்டாவது பருவகாலத்திற்கான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் மாதம் நடைபெறுகின்றது. இந்த இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக அவுஸ்திரேலியா ஏற்கனவே தெரிவாகியுள்ளது.

இந்த நிலையில், இறுதிப் போட்டியில் விளையாடும் ஏனைய அணியாக மாறுவதற்கான வாய்ப்பு இலங்கை அல்லது இந்தியாவிற்கு காணப்படுகின்றது.

இந்தியா ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாக அவுஸ்திரேலிய அணியுடன் அஹமதாபாத் நகரில் நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும். 

அவ்வாறு வெற்றி பெறும் சந்தர்ப்பத்தில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஏற்கனவே 2-1 என முன்னிலை பெற்றிருக்கும் இந்தியா 3-1 என்ற தொடர் முடிவுடன் 62.5 என்கிற வெற்றி சதவீதத்தினைப் பெற்று, ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இரண்டாவது அணியாக மாறும்.

இதேவேளை, இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடையும் போது அவர்களினால் வெற்றிச் சதவீதமாக 56.94 இணையே பெற முடியும். அதேநேரம் நான்காவது டெஸ்ட் போட்டியினை இந்தியா சமநிலைப்படுத்தும் போது அதிகபட்சமாக 58.79 இணையே வெற்றிச்சதவீதமாக பெற முடியும். 

எனவே இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாக நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முடிவினை எதிர்பார்த்திருக்க வேண்டும்.

இந்திய அணி அவுஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியினை சமநிலைப்படுத்தும் போதோ அல்லது தோல்வியடையும் போதோ, இலங்கை அணிக்கு ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு உருவாகும். 

இவ்வாறு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டால் இலங்கை நியூசிலாந்தினை இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என வைட்வொஷ் செய்ய வேண்டும். இவ்வாறு வைட்வொஷ் செய்யும் போது இலங்கை 61.11 என்கிற வெற்றி சதவீதத்துடன் ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்குச் செல்ல முடியும்.

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி

திமுத் கருணாரட்ன (தலைவர்), ஓசத பெர்னாண்டோ, தனன்ஞய டி சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, அசித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ, பிரபாத் ஜயசூரிய

எதிர்பார்க்கப்படும் நியூசிலாந்து அணி

டிம் சௌத்தி (தலைவர்), டொம் பிளன்டல், மைக்கல் பிரஸ்வெல், டெவோன் கொன்வெய், மேட் ஹென்ரி, டொம் லேதம், டேரைல் மிச்சல், நெயில் வெக்னர், ஹென்ரி நிக்கோல்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங்.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்