நாட்டுக்குள் போதைப்பொருள் கொண்டு வந்த பிரதான கடத்தல்காரர் கைது
இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்த பொலிஸார், அவர் வீட்டுக்கு வந்ததும் அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனை நடத்தியுள்ளனர்.
நாட்டுக்குள் பெருமளவு போதைப்பொருளை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் பிரதான கடத்தல்காரரை, கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் தாய்லாந்தின் பேங்கொக் நகரில் போதைப்பொருளை கொள்வனவு செய்து, மற்றொரு நபரின் ஊடாக அதை நாட்டுக்குள் அனுப்பி, பின்னர் தனது வீட்டில் மறைத்து வைத்திருந்துள்ளார். கைது செய்யப்பட்டவர் வத்தளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவராகவும், நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த நபர், பல்வேறு நபர்களை பயன்படுத்தி வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருளை நாட்டுக்குள் வரவழைத்து, பின்னர் நாடு முழுவதும் அதன் விநியோகத்தை வழிநடத்தியுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் கண்டறிந்துள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி இருபத்தி ஒரு கோடிக்கும் அதிகம் என (ரூ.216,680,000) தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் திகதி போதைப்பொருள் அடங்கிய பயணப் பொதியை மற்றொரு நபர் ஊடாக நாட்டுக்கு அனுப்பி, அதை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற்றி கடத்தல்காரரின் வீட்டில் ஒப்படைத்துள்ளனர். இதன் பின்னர், குறித்த கடத்தல்காரர் 14ஆம் திகதி கைப்பை ஒன்றை மாத்திரம் எடுத்துக்கொண்டு பேங்கொக் நகரிலிருந்து நாட்டுக்கு திரும்பியுள்ளார்.
இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்த பொலிஸார், அவர் வீட்டுக்கு வந்ததும் அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனை நடத்தியுள்ளனர். அங்கு திறக்கப்படாமல் இருந்த பயணப் பொதிகளில் 20 பொதிகளாக தயாரிக்கப்பட்டிருந்த குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், மொத்தமாக 21 கிலோ 668 கிராம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனுடன், சந்தேகநபரிடமிருந்து 4,900 அமெரிக்க டொலர்கள், அதாவது சுமார் 15 இலட்சத்து 19 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கடத்தல்காரர், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் பணம் ஆகியவை இன்று (15) வெலிசற நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.