பூதவுடலுடன் கொழும்புக்கு வருவோம்: செந்தில் கடும் எச்சரிக்கை

செந்தில் தொண்டமானுக்கும் கனவரெல்ல தோட்ட நிர்வாகத்துக்கும் இடையில் இன்று (11) பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு ​எச்சரித்துள்ளார்.

பூதவுடலுடன் கொழும்புக்கு வருவோம்: செந்தில் கடும் எச்சரிக்கை

பசறை, கனவரெல்ல தோட்டத் தொழிலாளியின் மரணத்துக்கு உரிய தீர்வு கிடைக்காவிடின், அவரது பூதவுடலை கொழும்புக்கு எடுத்துவந்து போராட்டத்தில் ஈடுபட அஞ்சமாட்டோமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் எச்சரித்துள்ளார்.

செந்தில் தொண்டமானுக்கும் கனவரெல்ல தோட்ட நிர்வாகத்துக்கும் இடையில் இன்று (11) பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு ​எச்சரித்துள்ளார்.

 தொழிலாளியின் மரணத்துக்கு  ஒரு கோடியே  2 இலட்சம் ரூபாய் நட்டஈடாக வழங்க வேண்டும். தோட்ட முகாமையாளர் மற்றும் தொழிற்சாலை அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் செந்தில் தொண்டமான் நிபந்தனை விதித்துள்ளார்.

 இவ்விரு நிபந்தனைகளுக்கும் நிர்வாகம் இணங்காவிடின் கொழும்பில் உள்ள நமுனுகல பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமைக் காரியாலயம் முன் தொழிலாளியின் பூதவுடலை வைத்து போராட்டம்  செய்யவும் தயாராக உள்ளோமென எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினர் எடுக்கும் சட்ட நடவடிக்கைக்கு  முழு உறுதுணையாக இ.தொ.கா முன்நிற்கும் என்றார்.

இன்றைய பேச்சுவார்த்தையின் போது, உயிரிழந்த தொழிலாளியின் மரண சடங்குகளுக்கான முழுமையான செலவை மாத்திரமே தாம் பெறுப்பேற்பதாக தோட்டம் நிர்வாகம் தெரிவித்தது. அதற்கு கடுமையான எதிர்ப்பை  இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் வெளிப்படுத்தினார்.

இளைஞனின் மரணத்துக்கு நட்டஈடு வழங்கப்படாத பட்சத்தில் பூதவுடல்  தொழிற்சாலையிலே  வைக்கப்படும் என எச்சரித்தார்.அதனை தொடர்ந்து உயிரிழந்த  குடும்பத்துக்கு 15 இலட்சம் ரூபாய் நஷ்டஈடாக வழங்க நிர்வாகம் முன்வந்தது.

அந்த தொகை போதுமானதல்ல. 21 வயதுடைய தொழிலாளியே  உயிரிழந்துள்ளார். அவர், தோட்டத்தில் மேலும் 34 வருடங்களுக்கு மேல்  பணிபுரிய முடியும். தற்போது வழங்கப்படும், நா​ளொன்றுக்கான  1,000 ரூபாய் சம்பளத்தின் பிரகாரம் கணக்கிட்டால் நட்டஈட்டு தொகையாக, ஒரு கோடியே  2 இலட்சம் ரூபாய் வழங்கவேண்டுமென செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இந்த கோரிக்கைகளுக்கு நிர்வாகம் இணங்காவிடின்  கொழும்பில் உள்ள நமுனுகல பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை காரியலயத்துக்கு முன்பாக பூதவுடலை வைத்து போராட்டம் செய்யவும் தயங்கமாட்டோமென செந்தில் தொண்டமான் கடுமையாக  எச்சரித்தார்.

பசறை கனவரல்ல தோட்டத்தில் E.G.K பிரிவில் தோட்ட தொழிற்சாலையில் தொழில் புரியும் 24 வயதுடைய கணேசமூர்த்தி என்ற இளைஞன்,  தோட்ட அதிகாரியின் வீட்டில் நீர் குழாய் திருத்துவதற்காக சென்ற வேளை மின்சாரம் தாக்கி பரிதாபமாக, கடந்த 9ஆம் திகதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.