நேபாளத்தில் சொகுசு வீட்டில் பதுங்கியிருந்த செவ்வந்தி சிக்கியது எப்படி? பரபரப்பான பின்னணி கதை!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். இவருடன் மேலும் 5 பேர் சிக்கியுள்ளனர். திரைப்படப் பாணியில் நடந்த இக்கொலையின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை குறித்த முழு விவரம்.

ஒக்டோபர் 15, 2025 - 11:23
நேபாளத்தில் சொகுசு வீட்டில் பதுங்கியிருந்த செவ்வந்தி சிக்கியது எப்படி? பரபரப்பான பின்னணி கதை!

நியூஸ் 21 (கொழும்பு) : புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் கைது செய்யப்பட்டார். 

காத்மாண்டு அருகே உள்ள பக்தபூர் மாவட்டத்தில் (Bhaktapur district)சொகுசு வீடு ஒன்றில் பதுங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். 

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி உட்பட ஐந்து பேரும் இதன்போது கைது செய்யப்பட்டனர். 

இலங்கை பொலிஸார், நேபாள பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் இன்டர்போல் ஆதரவுடன் இணைந்து நடத்தப்பட்ட மூன்று நாட்கள் தேடுதல் நடவடிக்கையை அடுத்து, சந்தேக நபர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து கடந்த பெப்ரவரியில் சுட்டுக்கொல்லப்பட்டார். 

திரைப்படப் பாணியில் இந்தக் கொலை திட்டமிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. சட்ட புத்தகம் ஒன்றுக்குள் துப்பாக்கியை மறைத்துவைத்து, சட்டத்தரணி போன்று வேடமிட்டு, கொலையாளி நீதிமன்றத்திற்கு நுழைந்து, கொலைத் திட்டத்தை அரங்கேற்றியிருந்தார்.

இந்தக் கொலைக்குப் பின்னணியில் இஷாரா செவ்வந்தி இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அதனையடுத்து செவ்வந்தி தலைமறைவாகியிருந்தார். பொலிஸார் அவரைக் கைதுசெய்ய முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை.

இதனையடுத்து, செவ்வந்தி, நாட்டிலிருந்து தப்பியோடிவிட்டதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது.

பின்னர், நேபாளத்திற்குச் சென்ற இலங்கை பொலிஸ் குழு, செவ்வந்தி இருக்கும் இடத்தைக் கண்டறிய நேபாள பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டனர்.

இலங்கையில் இருந்து படகு மூலம் இந்தியாவிற்கு "ஜே.கே.பாய்" என்ற ஒரு கூட்டாளியின் உதவியுடன் செவ்வந்தி நாட்டை விட்டு தப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தியாவில் இருந்து, அவர் நேபாளத்திற்கு ரயிலில் பயணம் செய்துள்ளார். அங்கு அவர் ஓர் சொகுசு வீட்டில் போலி அடையாளத்துடன் வசித்து வந்துள்ளார். 

இந்தோனேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மே பாதாள உலக கும்பலின் கூட்டாளி ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பின்னர் பல  தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்தன. இதில் செவ்வந்தியில் இருப்பிடமும் வெளிப்பட்டது. 

இந்த இரகசியத் தகவலின் அடிப்படையில், திங்கட்கிழமை இரவு மேற்படி சொகுசு வீட்டை சோதனை செய்ய நேபாள அதிகாரிகளுடன் இலங்கைப் பொலிஸ் குழு சுற்றிவளைத்துள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையில் போது, இஷாரா செவ்வந்தி எந்தவிட எதிர்ப்பும் காட்டாமல் அதிகாரிகளிடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஒரு நாள் தான் கைதுசெய்யப்படுவேன் என்று எதிர்பார்த்ததாக அவர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். 

இந்த சோதனை நடவடிக்கையின் போது, கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி  "ஜே.கே.பாய்"  உட்பட மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

செவ்வந்தி தன்னைப் போன்று தோற்றமுள்ள யாழ்ப்பாணப் பெண் ஒருவரின் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, ஐரோப்பாவுக்குத் தப்பிச்செல்லத் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. 

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ​​பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களில் ஒருவரான "கம்பஹா பாபா" என்பவரும் கைதுசெய்யப்பட்டார். அவர், இலங்கை அதிகாரிகளுக்கு 5 மில்லியன் ரூபாய் இலஞ்சம் வழங்க முன்வந்துள்ளார். அது அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.

சந்தேகநபர்கள் தற்போது நேபாள அதிகாரிகளின் காவலில் உள்ளனர். அவர்களை இலங்கைக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில்,  விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த இரு வீரர்கள் நேபாளத்துக்கு சென்றுள்ளனர்.

ஏற்கெனவே நேபாளத்தில் உள்ள இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளுக்கு உதவும் வகையில் அவர்கள் நேபாளம் சென்ற நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று புதன்கிழமை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள, திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 40 சந்தேகநபர்களில் 18 பேர் இதுவரை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார். 

அத்துடன், திட்டமிட்ட குற்றச் செயல்களால் சேகரிக்கப்பட்ட 140 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான தங்கம் மற்றும் பணம் உள்ளிட்ட சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, நீதிமன்றத்தை உதாசீனப்படுத்தும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர்களை வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விசாரணைகளும், சர்வதேச சுற்றிவளைப்புக்களும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!