கொஹுவளை துப்பாக்கிச் சூடு சம்பவம்: கொலை முயற்சி தொடர்பில் 4 பேர் கைது
முதற்கட்ட விசாரணைகளில், இரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் விளைவாகவே, இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொஹுவளை - சரணங்கர வீதி, போதியவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்கிசைப் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினரால், நேற்று சனிக்கிழமை (03) தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில பகுதியில் வைத்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரும் பின்னர் கொஹுவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்தியவர், துப்பாக்கிக்கு பொறுப்பாக இருந்தவர், துப்பாக்கியை கடத்திச் சென்றவர் மற்றும் குற்றவாளிகளுக்கு தங்குமிட வசதி செய்து கொடுத்தவர் என நான்கு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 25, 28, 33 மற்றும் 45 வயதுடைய தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்ட விசாரணைகளில், இரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் விளைவாகவே, இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து 3 ரிவோல்வர் ரக துப்பாக்கிகள், 9 மி.மீ அளவிலான 10 தோட்டாக்கள், 50 கிராம் ஹெரோயின், 55 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த டிசெம்பர் 30ஆம் திகதி, கொஹுவளை போதியவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். இந்தச் சம்பவத்தில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.