இலங்கையில் 14 வயது சிறுவன் தாக்கிக் கொலை; சந்தேகத்தில் சிறுவனின் தந்தை கைது
சிறுவன், நூரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையின் வைத்தியர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கேகாலை – நூரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூரியவத்தை 02ஆம் பிரிவில் வசித்து வந்த 14 வயது சிறுவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நூரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றிரவு (02) குறித்த சிறுவன் தாக்கப்படுவதாக நூரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் அங்கு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்போது, வீடொன்றின் அருகில் அந்தச் சிறுவன் விழுந்த நிலையில் கிடந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சிறுவன், நூரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையின் வைத்தியர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த மரணம் சந்தேகத்திற்குரியது எனக் கருதப்படுவதால், மேலதிக விசாரணைகளுக்காக சடலம் - அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிறுவனின் தந்தை, நூரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நூரிய பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

