நெடுந்தீவில் பாம்பு தீண்டிய பெண், விமானம் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்

கடல் கொந்தளிப்பு காரணமாக கடல்வழி போக்குவரத்து சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டதால், இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டது.

ஜனவரி 6, 2026 - 10:51
நெடுந்தீவில் பாம்பு தீண்டிய பெண், விமானம் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்
AI generated image

நெடுந்தீவு பகுதியில் பாம்பு தீண்டலுக்கு உள்ளான பெண்ணொருவர், அவசர சிகிச்சைக்காக விமானம் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவரது தகவலின்படி, நெடுந்தீவைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் நேற்று பாம்பு கடிக்கு இலக்காகி, உடனடியாக நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சை அவசியமாகிய நிலையில், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது.

எனினும், கடல் கொந்தளிப்பு காரணமாக கடல்வழி போக்குவரத்து சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டதால், இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் விமானப்படையின் உதவி பெற்றுக் கொண்டு, குறித்த பெண் விமானம் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அந்த பெண் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!