யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 5வது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 5வது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு நாளை (புதன்கிழமை 08) நடைபெறவுள்ளது. "வெவ்வேறு துறைகளை இணைத்து மாற்றங்களை வலுவூட்டுவதற்காக அறிவைச் செயற்படுத்துதல்" என்ற தொனிப்பொருளில் 16 ஆய்வுத் தடங்களில் மாணவர்கள் தமது ஆய்வுகளை அளிக்கவுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு, நாளை புதன்கிழமை (08) நடைபெறவுள்ளது.
பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில், காலை 9 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் இந்த ஆய்வுமாநாட்டின் முதன்மை விருந்தினராக பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா கலந்து சிறப்பிக்க இருக்கின்றார்.
ஆய்வு மாநாட்டுக்கு கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமை தாங்குவார்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானத்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர் எஸ். சந்திரபோஸ் திறப்புரையினை ஆற்றவிருக்கின்றார்.
பல்கலைக்கழகங்களின் பணிகளில் பிரதான பணிகளில் ஒன்றாக இருப்பது ஆய்வுச் செயன்முறையாகும். பல்கலைக்கழக ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்களும் கல்விசார் ஆய்வுகளில் சிரத்தையுடன் ஈடுபட வேண்டும் எனும் எதிர்பார்ப்பு அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.
அதற்கமைய பல்கலைக்கழக மாணவர்களும் பல்வேறு தடங்களில் தமது ஆய்வு நாட்டத்தைக் காண்பித்து வருகிறார்கள். இந்தவகையில், கலைப்பீடத்தின் இளம் கலைமாணி ஆய்வு மாநாடு, கடந்த நான்கு வருடங்களாக மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
இம்முறை நடைபெறும் ஐந்தாவது மாநாடு, “வெவ்வேறு துறைகளை இணைத்து மாற்றங்களை வலுவூட்டுவதற்காக அறிவைச் செயற்படுத்துதல்” என்னும் தொனிப்பொருளோடு, 16 ஆய்வுத் தடங்களில் நடைபெற ஏற்பாடாகியிருக்கிறது.
இளங்கலைமாணி பட்டக்கற்கையின் இறுதியாண்டில் மாணவர்கள் நிறைவுறுத்திய ஆய்வுகளின் அளிக்கையாக இம்மாநாடு அமைய இருக்கின்றது. அவை ஆய்வுச் சுருக்கங்களாக இந்த ஆய்வு மாநாட்டின் ஆய்வடங்கல் மூலமும் வெளியிடப்படுகின்றன.