காதலியுடன் நேரம் செலவிட லீவு கேட்ட ஊழியர் – பணியிட கலாசாரத்தில் மாற்றம்!
இன்றைய தலைமுறை இவ்வளவு நேர்மையாக காரணத்தை சொல்வது ஆரோக்கியமான பணியிட மாற்றத்தை காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு ஊழியர் தனது மேலாளரிடம் விடுப்பு கோரி அனுப்பிய நேர்மையான மின்னஞ்சல் தற்போது LinkedIn தளத்தில் வைரலாகி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பணியிடங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் விடுப்பு கோரிக்கைகள் குறித்த அணுகுமுறைகள் எவ்வாறு மாறி வருகின்றன என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.
டிசெம்பர் 16-ஆம் திகதி ஒரு நாள் விடுப்பு கேட்டு அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சலில், ஊழியர் எந்த மறைப்பும் இன்றி உண்மையான காரணத்தைத் தெரிவித்துள்ளார். தனது காதலி அடுத்த நாள் உத்தரகாண்டில் உள்ள வீட்டிற்கு செல்லவிருப்பதாகவும், ஜனவரி வரை திரும்பமாட்டார் என்பதாலும், அவர் புறப்படும் முன் அந்த நாளை ஒன்றாக செலவிட விரும்புவதாகவும் மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மின்னஞ்சலின் திரைப்பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த மேலாளர், “காலம் மாறுகிறது” என்ற கருத்துடன் பதிவு செய்துள்ளார். முன்பு இதுபோன்ற விடுப்புகள் ‘தனிப்பட்ட அவசரம்’ அல்லது ‘குடும்ப வேலை’ போன்ற காரணங்களுடன் மறைக்கப்பட்டு கேட்கப்பட்டிருக்கும் என்றும், ஆனால் இன்றைய தலைமுறை இவ்வளவு நேர்மையாக காரணத்தை சொல்வது ஆரோக்கியமான பணியிட மாற்றத்தை காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊழியரின் வெளிப்படையான அணுகுமுறையும், அதை நேர்மையாக ஏற்றுக்கொண்ட மேலாளரின் மனப்பான்மையும் சமூக வலைதள பயனர்களிடையே தற்போது பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.