மறைக்கப்பட்ட கார் கதவு கைப்பிடிகளுக்கு சீனா தடை – பாதுகாப்பு கவலைகள் காரணம்

புதிய விதிமுறைகளின் படி, கார்களின் கதவுகள் மின்சாரம் இல்லாத சூழலிலும் கைப்பிடி, கம்பி அல்லது சாவி போன்ற இயந்திர முறைகள் மூலம் திறக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 3, 2026 - 20:04
மறைக்கப்பட்ட கார் கதவு கைப்பிடிகளுக்கு சீனா தடை – பாதுகாப்பு கவலைகள் காரணம்

மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் மறைக்கப்பட்ட கதவு கைப்பிடிகளுக்கு சீனா தடை விதித்துள்ளது. இந்த வடிவமைப்பை டெஸ்லா நிறுவனம் பிரபலப்படுத்திய நிலையில், இதனைத் தடை செய்த முதல் நாடாக சீனா மாறியுள்ளது. அண்மையில் ஷாவ்மி மின்சார வாகனங்களைச் சேர்ந்த இரண்டு விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டதையடுத்து, பாதுகாப்பு தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அந்த விபத்துகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், கார்களின் கதவுகள் திறக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகளவில் பாதுகாப்பு அமைப்புகள் மின்சார வாகனங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன. புதிய விதிமுறைகளின் படி, கார்களின் கதவுகள் மின்சாரம் இல்லாத சூழலிலும் கைப்பிடி, கம்பி அல்லது சாவி போன்ற இயந்திர முறைகள் மூலம் திறக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு பயணிகள் கதவின் வெளிப்புறத்திலும் குறைந்தபட்ச அளவில் கைப்பிடியை அணுகக்கூடிய இடம் அமைக்கப்பட வேண்டும் என்றும், காரின் உள்ளே கதவை திறக்கும் முறையை விளக்கும் அடையாளங்கள் இருக்க வேண்டும் என்றும் விதிகள் குறிப்பிடுகின்றன. இந்த புதிய நடைமுறைகள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சீன சந்தைக்குள் நுழைய அனுமதி பெற்றுள்ள கார்கள், தங்கள் வடிவமைப்புகளை மாற்றுவதற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும்.

சீனாவின் புதிய ஆற்றல் வாகன சந்தையில் மின்சார வாகனங்கள், ஹைப்ரிட் மற்றும் எரிபொருள் செல்கள் மூலம் இயங்கும் வாகனங்களில் மறைக்கப்பட்ட கதவு கைப்பிடிகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதிகம் விற்பனையாகும் புதிய ஆற்றல் வாகனங்களில் சுமார் 60 சதவீதத்தில் இந்த வசதி உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த விதிகள் சீனாவில் விற்கப்படும் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தினாலும், உலக கார் சந்தையில் சீனாவின் தாக்கம் காரணமாக இதன் விளைவுகள் சர்வதேச அளவிலும் எதிரொலிக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், டெஸ்லா வாகனங்களில் பயன்படுத்தப்படும் மின்சார கதவு கைப்பிடிகள் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளாலும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சில சந்தர்ப்பங்களில் கைப்பிடிகள் செயலிழந்ததால் வாகனங்களுக்குள் குழந்தைகள் சிக்கியதாக புகார்கள் எழுந்துள்ளன. டெஸ்லா மாடல் Y வாகனங்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சிலர் கார் ஜன்னலை உடைத்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!