"ஜே.வி.பி.க்கு அரசியல் செய்ய தெரியலாம்; ஆனால் நாட்டை ஆளத் தெரியாது” சாமர சம்பத் தசநாயக்க
புதிய தலைவர் பதவியேற்ற பின், கட்சியின் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு, சமீபத்தில் புதிய செயற்குழுவும் அரசியல் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற கட்சிகளுக்கு “அரசியல் செய்யத் தெரியலாம். ஆனால் நாட்டை ஆளத் தெரியாது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
கொழும்பில் உள்ள கட்சி தலைமையகத்தில் திங்கட்கிழமை (ஜனவரி 5, 2026) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசும்போது, தற்போது கட்சியில் மீண்டும் ஒற்றுமை ஏற்படுத்தும் முயற்சி ஆரம்பித்துள்ளதாகவும், 10–11 ஆண்டுகளாக கட்சியிலிருந்து விலகி இருந்த பலர், உதாரணமாக விதுர விக்ரமநாயக்க, ரமேஷ் பத்திரன் ஆகியோர் – தலைமையகத்திற்கு திரும்பி வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
புதிய தலைவர் பதவியேற்ற பின், கட்சியின் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு, சமீபத்தில் புதிய செயற்குழுவும் அரசியல் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன.
சாமர சம்பத், பாராளுமன்றத்தில் தாமே அதிகம் பேசுபவராகவும், மக்களின் பல்வேறு பிரச்சினைகளை உரத்துக் குரல் எழுப்பி எடுத்துரைப்பவராகவும் உள்ளதாகக் கூறினார். தனது புதிய அலுவலகம் திறக்கப்பட்டு, மக்கள் தொடர்புகொள்ள ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அவர் மேலும், “இந்தக் கட்சி யாருடைய சொத்தும் அல்ல; கட்சியின் கதவுகள் அனைவருக்கும் திறந்திருக்கின்றன” என்று வலியுறுத்தினார். தகுதியுள்ளவர்களுக்கு பதவிகள் வழங்க தயாராக இருப்பதாகவும், “ஜனாதிபதி வேட்பாளர் பதவியைக் கூட வழங்கத் தயார்” என்றும் கூறினார்.
கட்சியுடன் தொடர்புடைய 18 வழக்குகளில் 17 தீர்க்கப்பட்டுள்ளன என்றும், விஜேதாச ராஜபக்ஷ தனது வழக்குகளை வாபஸ் பெற்று உப தலைவராக இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது தயாசிறி ஜயசேகர தொடர்ந்துள்ள வழக்கு மட்டுமே எஞ்சியிருப்பதாகக் கூறினார்.
தயாசிறியுடன் ஐந்து நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ‘தேசிய அமைப்பாளர்’ பதவி வழங்க முன்வந்ததாகவும், அவர் முதலில் ஒப்புக்கொண்டு, பின்னர் குடும்பத்தின் எதிர்ப்பை சுட்டிக்காட்டி விலகியதாகவும் விளக்கினார். இருப்பினும், “அவருக்கான கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன” என்றும், யாரையும் நீக்கும் எண்ணம் இல்லை என்றும் வலியுறுத்தினார்.
இறுதியாக, “எனது நோக்கம் அனைவரையும் ஒன்றிணைத்து, ஒரு சிறந்த இளைஞர் அணியிடம் இந்தக் கட்சியைக் கையளிப்பதே” என்று அவர் கூறினார்.