குடும்பத் தகராறில் பெட்ரோல் ஊற்றி வீட்டுக்கு தீ வைத்த கொடூரம்: தந்தை, 13 வயது மகள் உயிரிழப்பு!

சம்பவத்தை அறிந்ததும் அங்கு வந்த 20 வயதுடைய மகன், தாய் மற்றும் சகோதரிகளை காப்பாற்ற முயன்ற போது, அவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி 6, 2026 - 10:07
ஜனவரி 6, 2026 - 10:11
குடும்பத் தகராறில் பெட்ரோல் ஊற்றி வீட்டுக்கு தீ வைத்த கொடூரம்: தந்தை, 13 வயது மகள் உயிரிழப்பு!

குடும்பத்துக்குள் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், ஒருவர் பெட்ரோல் ஊற்றி தனது வீட்டிற்குத் தீ வைத்த சம்பவத்தில் தந்தையும் அவரது 13 வயது மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (06) அதிகாலை 02 மணியளவில் கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரகம் கொலனி, படிகாரமடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக 43 வயதுடைய நபர் வீட்டிற்குத் தீ வைத்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தீ விபத்தில், அந்த நபரும் அவரது இளைய மகளும் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, தீயில் சிக்கிய 36 வயதுடைய மனைவி, 15 வயது மகள், 20 வயது மகன் மற்றும் 66 வயதுடைய பாட்டி ஆகியோர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ நேரத்தில் வீட்டில் மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் மனைவியின் தாய் மட்டுமே இருந்ததாகவும், சம்பவத்தை அறிந்ததும் அங்கு வந்த 20 வயதுடைய மகன், தாய் மற்றும் சகோதரிகளை காப்பாற்ற முயன்ற போது, அவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தீ வைத்த நபர் அடிக்கடி மதுபானம் அருந்தி மனைவியை தாக்கி வந்ததாகவும், அவர்களுக்கிடையிலான தகராறு காரணமாக பலமுறை கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு, இரு தரப்பினருக்கும் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!