"ஒத்துழைக்கவில்லை என்றால் மீண்டும் தாக்குவேன்!" – வெனிசுவேலா இடைக்கால அதிபருக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அமெரிக்க ராணுவம் வெனிசுவேலாவில் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா வெனிசுவேலா மீது திடீர் இராணுவத் தாக்குதல் நடத்தி, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து அமெரிக்காவிற்கு அழைத்து வந்தது. இதன்மூலம் வெனிசுவேலாவின் முக்கிய இயற்கை வளமான எண்ணெய் இருப்புகளை அமெரிக்க நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன.
அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அமெரிக்க ராணுவம் வெனிசுவேலாவில் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
வெனிசுவேலா உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "வெனிசுவேலா அரசு அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று தெளிவாக எச்சரித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: "வெனிசுவேலாவில் எண்ணெய் தொழிலை மேம்படுத்தவும், போதைப்பொருள் கடத்தலை முற்றிலும் நிறுத்தவும் அமெரிக்கா முயற்சிக்கிறது. அதற்கு முட்டுக்கட்டை போட்டால், மீண்டும் ராணுவத் தாக்குதலுக்கு உத்தரவிடத் தயங்கமாட்டேன்." மேலும், "மதுரோ மீதான குற்றச்சாட்டுகள் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன. அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்" எனவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
தனது எச்சரிக்கைகளை மேலும் விரிவுபடுத்திய அவர், கொலம்பியா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டால் அவற்றின் மீதும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று குறிப்பிட்டார். மேலும், கியூபாவின் கம்யூனிச ஆட்சி "தானாகவே வீழும் நிலையில் உள்ளது" என்றும் கூறினார்.
இதற்கு பதிலளித்த இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், வெனிசுவேலா தனது இயற்கை வளங்களை பாதுகாக்கும் என்று உறுதியளித்தார். இருப்பினும், அமெரிக்காவுடன் இணைந்து வளர்ச்சித் திட்டங்களில் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே கண்ணியமான, சமமான உறவை உருவாக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.