2026 புத்தாண்டில் மறுசீரமைப்பு, மீள்கட்டியெழுப்பும் பயணத்தைத் தொடங்குகிறோம் – ஜனாதிபதி
இலங்கை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த ஊழல் நிறைந்த அரசியல் நடைமுறைகளுக்கு மாற்றாக, பொதுமக்களுக்கு நேர்மையாக சேவை செய்யும் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய மறுசீரமைப்பு செயல்முறையும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பையும் தோள்மேல் சுமந்த நிலையில், இலங்கை 2026ஆம் ஆண்டு புத்தாண்டில் கால் பதிக்கிறது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில், கடந்த 2025 ஆம் ஆண்டு தேசிய அபிலாஷைகளை மையமாகக் கொண்டு நிலையான அபிவிருத்திக்கான வலுவான அடித்தளத்தை அமைத்த ஆண்டாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வரவு–செலவுத் திட்ட பற்றாக்குறையைப் பதிவு செய்ததும், 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக அரச வருவாயை ஈட்டியதுமாக 2025 ஆண்டு வரலாற்றுச் சாதனைகளைக் கண்டது. அதேபோல், நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக முதன்மை கணக்கு மிகை பெறப்பட்டதும், பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி வருவாய் சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்ததும், அரச வருவாய் இலக்குகளை விஞ்சிய ஒரே ஆண்டாக 2025 பதிவு செய்யப்பட்டதுமாக முக்கிய பொருளாதார முன்னேற்றங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. சுற்றுலா துறையிலும் அண்மைக் காலத்தில் அதிகளவு பயணிகள் நாட்டிற்கு வருகை தந்த வருடமாக 2025 அமைந்தது என ஜனாதிபதி கூறியுள்ளார்.
மேலும், இலங்கை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த ஊழல் நிறைந்த அரசியல் நடைமுறைகளுக்கு மாற்றாக, பொதுமக்களுக்கு நேர்மையாக சேவை செய்யும் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்கால தலைமுறையை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய செயற்பாடு உள்ளிட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டு அரசியல் மற்றும் சமூக மாற்றங்களில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பதிவாகியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைக் காலங்களில் நாடு எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவையும் கடந்த ஆண்டு மக்கள் ஒன்றிணைந்து எதிர்கொண்டதாக ஜனாதிபதி நினைவூட்டியுள்ளார். எந்த பேரழிவினாலும் அழிக்க முடியாத மனிதநேயப் பண்பு இலங்கை மக்களிடையே வலுவாக இருப்பதை இந்தச் சோதனை மீண்டும் நிரூபித்ததாகவும், நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்ட சகோதரர்களின் துயரத்தில் கைகோர்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சவால்களை எதிர்கொள்ள உதவிய வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், மீளெழுச்சிக்கு நட்புறவின் பலத்தை வழங்கிய உலக நாடுகள், அனர்த்த காலத்தில் அயராது பணியாற்றிய பொலிஸார், முப்படையினர் மற்றும் அரச உத்தியோகஸ்தர்கள் அனைவருக்கும் தனது நன்றியை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாம் இன்னும் ஒன்றாக நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக வரலாற்றில் வீழ்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்பியதில் அந்த மக்களின் இலட்சியமும் தைரியமும் முக்கிய பங்காற்றியதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலங்கை மக்களின் அசைக்க முடியாத தைரியத்தின் பலத்தால், முன்பு இருந்ததைவிட சிறந்த நாட்டை மீண்டும் உருவாக்க முடியும் என்ற உறுதியை வெளிப்படுத்தியுள்ளார்.
புத்தாண்டு வருகை கடந்த ஆண்டின் அனுபவங்களை மீள்பரிசீலனை செய்யவும், புதிய நம்பிக்கையுடனும் சாதகமான மனப்பாங்குடனும் எதிர்காலத்தை திட்டமிடவும் ஒரு வாய்ப்பை அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் தேசிய முயற்சியில் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் சகோதரத்துவத்துடன் கைகோர்க்க அனைவரையும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். மலர்ந்த 2026 புத்தாண்டு, மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமைய வேண்டும் என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

