பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

நாட்டில் தற்போது பெய்து வரும் அதிக மழையின் காரணமாக நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ஒக்டோபர் 25, 2025 - 09:21
பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

நாட்டில் தற்போது பெய்து வரும் அதிக மழையின் காரணமாக நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

களனி, அத்தனகலு, கிங் மற்றும் பென்தர ஆறுகளை அண்மித்த பகுதிகளிலும் 50 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், களுகங்கையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

களுகங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதன் காரணமாக இரத்தினபுரி, மில்லகந்த, எல்லகாவ பிரதேசங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

எனினும், அது வெள்ளப்பெருக்கு நிலைமைக்கு வரும் என எதிர்பார்க்கப்படவில்லை என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவானால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், களுகங்கையை அண்மித்த குடியிருப்பாளர்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளது.

களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவை அண்மித்த மக்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும், மழைவீழ்ச்சிக்கு அமைய அந்தப் பிரதேசங்களை அண்மித்த பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படுமா என்பது குறித்து மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!