NZ vs SL, 1st Test: அதிரடி காட்டி நியூசிலாந்தை தடுமாற வைத்த இலங்கை!

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் எடுத்தது. 

Mar 10, 2023 - 13:46
Mar 10, 2023 - 14:36
NZ vs SL, 1st Test: அதிரடி காட்டி நியூசிலாந்தை தடுமாற வைத்த இலங்கை!

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை டி சில்வா 36 ரன்களுடனும், கசுன் ரஜிதா 16 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டி சில்வா 46 ரன்களில் ஆட்டமிழக்க, ரஜித 22 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய இலங்கை வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்ப, இலங்கை அணி 355 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதீ 5 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் - டெவான் கான்வே இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இதில் டாம் லேதம் அரைசதம் கடந்தார். இதற்கிடையில் டெவான் கான்வே 30 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 1, ஹென்றி நிக்கோலஸ் 2 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். 

அதனைத்தொடர்ந்து மறுமுனையில் 67 ரன்களைச் சேர்த்திருந்த டாம் லேதம் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டாம் பிளெண்டலும் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் - மைக்கேல் பிரேஸ்வெல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் மிட்செல் 40 ரன்களுடனும், பிரேஸ்வெல் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

நியூசிலாந்து தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ, லஹிரு குமார தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்