ஷுப்மன், யஷஸ்வி அபார சதம்; இளம் இந்திய அணி அதிரடியாக ரன் குவிப்பு!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் ஆரம்பம் முதலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கேஎல் ராகுல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரிகளுடன் 42 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
தொடர்ந்து தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய சாய் சுதர்ஷன் ரன்கள் ஏதுமின்றி ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்ததுடன் 16 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 101 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இங்கிலாந்து மண்ணில் சதமடித்து சாதனைகளை குவித்த யஷஸ்வி ஜெஸ்வால்!
ரிஷப் பந்த்தும் வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷுப்மன் கில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.
ரிஷப் பந்தும் அரைசதத்தைப் பூர்த்தி செய்ததுடன், இருவரும் இணைந்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன்மூலம் இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 359 ரன்களைக் குவித்துள்ளது.
கேப்டன் ஷுப்மன் கில் 127 ரன்களுடனும், துணைக்கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தராப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.