டார்ஜிலிங்கில் பலத்த மழையால் நிலச்சரிவு: 17 பேர் உயிரிழப்பு
மேற்குவங்காள மாநிலத்தில் டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப் பூர்துவார் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மேற்குவங்காள மாநிலத்தில் டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப் பூர்துவார் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கனமழை , நிலச்சரிவால் டார்ஜிலிங் மாவட்டத்தில் மிரிக்- குர்சியோங்கின் மாவட்ட நகரங்கள் மற்றும் சுற்றுலா தலங்களை இணைக்கும் துடியா இரும்புப் பாலமும் இடிந்து விழுந்துள்ளது.
நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து டார்ஜிலிங்கில் உள்ள டைகர் ஹில் மற்றும் ராக் கார்டன் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.
பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மலைப்பகுதி மாவட்டங்களில் இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்து வரும் பலத்த மழையால் அண்டை மாவட்டமான ஜல்பைகுரியன் மல்பஜாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேற்கு வங்காளம்- சிக்கிமை இணைக்கும் சாலை மற்றும் சிலிகுரியை இணைக்கும் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.