தென்னாபிரிக்காவுடன் இன்று 3ஆவது போட்டி- நெருக்கடியில் இந்திய அணி

தென்னாபிரிக்காவுடனான தொடரை இழக்காமல் இருக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி உள்ளது.

ஜுன் 14, 2022 - 19:37
தென்னாபிரிக்காவுடன் இன்று 3ஆவது போட்டி- நெருக்கடியில் இந்திய அணி

இந்தியா - தென்னாபிரிக்க அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.

ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது. இதனால் தொடரை இழக்காமல் இருக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.

முதல் போட்டியில் மோசமான பந்துவீச்சாலும், 2-வது ஆட்டத்தில் மோசமான பேட்டிங்காலும் தோல்வி ஏற்பட்டது. இதை சரி செய்து 3-வது போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயமாகும்.

வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்வது அவசியமாகும். கடந்த போட்டியில் சுழற்பந்து வீரர்கள் சாஹல், அக்‌ஷர் படேல் ரன்களை வாரிக் கொடுத்தனர். 

இதனால் ஒருவரை கழற்றி விட்டு ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு கொடுக்கலாம். வேகப்பந்து வீரர் அவேஷ் கான் இடத்தில் உம்ரான் மாலிக் அல்லது அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்ய வேண்டும்.

ருதுராஜ் கெய்க்வாட் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. கேப்டன் பொறுப்பால் ரிஷப் பண்ட் திணறி வருகிறார். ஸ்ரேயாஸ் அய்யரால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. 

இஷான் கிஷன் ஒருவர் மட்டுமே நன்றாக விளையாடுகிறார். இதனால் முக்கியமான இந்த ஆட்டத்தில் வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆட வேண்டும்.

பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.

அந்த அணியின் பேட்டிங்கில் டேவிட் மில்லர் , வான்டர் டூசன், கிளாசன் ஆகியோரும், பந்துவீச்சில் ரபடா, நோர்க்கியா , பார்னல் ஆகி யோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

இன்றைய போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!