ஐதராபாத் - டெல்லி அணிகள் இன்று மோதல்... வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்..?
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி (3 வெற்றி, 7 தோல்வி) 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இதுவரை 54 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடக்கும் 55வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி (3 வெற்றி, 7 தோல்வி) 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, ரன்ரேட்டை வலுப்படுத்தி, மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் மட்டுமே ஐதராபாத்துக்கு பிளே-ஆப் கதவு திறக்கும்.
டெல்லி அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி (6 வெற்றி, 4 தோல்வி) 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அடுத்த சுற்றை எட்டுவதற்கு மீதமுள்ள 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்றாக வேண்டும்.
தனது கடைசி இரு ஆட்டங்களில் (பெங்களூரு, கொல்கத்தாவுக்கு எதிராக) தோல்வியை தழுவிய டெல்லி அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் காத்திருக்கிறது.
இரு அணிகளும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. நடப்பு தொடரில் ஏற்கனவே ஐதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.