உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யாவின் கடும் தாக்குதல்: அதிகாரிகள் தகவல்
ரொய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கீவ் நகரில் வான் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்பட்டதை நேரில் கண்டதாக தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் தலைநகர் கீவ் மீது டிசம்பர் 27, 2025 சனிக்கிழமை அதிகாலை ரஷ்யா மேற்கொண்ட கடும் தாக்குதலால் நகரம் முழுவதும் பதற்றம் நிலவியது. நகரில் பல இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், வான் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைன் இராணுவத்தின் தகவலின்படி, இந்த தாக்குதலின் போது குரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி, அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து, ரஷ்யா–உக்ரைன் இடையில், சுமார் நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் போருக்கு தீர்வு காணும் ஒப்பந்தம் தொடர்பாக பேசவுள்ள நிலையில், அந்த சந்திப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இதனால் அரசியல் மற்றும் ராணுவ ரீதியாக இந்த தாக்குதல் முக்கியத்துவம் பெறுகிறது.
ரொய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கீவ் நகரில் வான் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்பட்டதை நேரில் கண்டதாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், அதிகாரப்பூர்வமற்ற டெலிகிராம் சேனல்களில் நகரின் பல பகுதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.