வளமான கலாசார விழுமியங்களை வளர்க்க வழிகாட்டும் தைப்பொங்கல்: பிரதமர் ஹரிணி அமரசூரிய வாழ்த்துச் செய்தி
விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் மக்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் சுபீட்சத்துக்காக மேற்கொள்ளப்படும் இந்த அர்ப்பணிப்பான பயணமும் ஒரு நற்பயிரை வளர்ப்பதற்கு ஒப்பானது என விளக்கினார்.
இயற்கையைப் போற்றி நன்றி செலுத்தும் தைப்பொங்கல் பண்டிகை, வளமான கலாசார விழுமியங்களைக் கொண்ட பிரஜைகளை உருவாக்க எமக்கு வழிகாட்டுகின்றது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
உழைப்புக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் உயரிய பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை அவர் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
மனித வாழ்வியலானது இயற்கையுடன் எவ்வளவு ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளது என்பதை இந்தத் திருநாள் உலகுக்கு எடுத்துரைக்கிறது என்றும், நாம் அனைவரும் இயற்கையின் படைப்புக்களாக இருப்பதால், இயற்கையை மீறி எந்தவொரு பயணத்தையும் மேற்கொள்ள முடியாது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இயற்கையினால் எமக்குக் கிடைக்கப்பெற்ற ஆசீர்வாதங்களுக்கு நன்றி செலுத்துவது உயரிய மனிதப் பண்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு என்ற ரீதியில் இலங்கை இன்று ஒரு தீர்மானமான மாற்றக் கட்டத்தில் நிற்கின்றதாகவும், கொள்கை மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்கள் ஊடாக மனப்பாங்கிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, தேசத்தை ‘மறுமலர்ச்சி யுகம்’ நோக்கி இட்டுச் செல்லும் பெரும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சவால்கள் நிறைந்த இந்தப் பயணம் இருந்தபோதிலும், ஒரு அரசாங்கமாக அந்தப் பொறுப்பை ஏற்று, தேசத்தின் பரிணாம வளர்ச்சிக்கான புதிய வருடத்தை உறுதியுடன் ஆரம்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் மக்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் சுபீட்சத்துக்காக மேற்கொள்ளப்படும் இந்த அர்ப்பணிப்பான பயணமும் ஒரு நற்பயிரை வளர்ப்பதற்கு ஒப்பானது என விளக்கினார். இந்தச் சூழலில், இயற்கையைப் போற்றி நன்றி செலுத்தும் தைப்பொங்கல் பண்டிகை, வளமான கலாச்சார விழுமியங்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்க வழிகாட்டுவதாக அவர் வலியுறுத்தினார்.
ஒருவரையொருவர் மதித்தல், பிற மத மற்றும் கலாச்சார உரிமைகளை பேணுதல் போன்ற உயரிய பண்புகளுடன், நல்லிணக்கம் மிக்க ஒரு புதிய இலங்கையைக் கட்டியெழுப்ப இந்தத் தைப்பொங்கல் திருநாளில் அனைவரும் ஒன்றிணைந்து உறுதி பூண வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் தமிழ் மக்களின் அனைத்துப் பிரார்த்தனைகளும் நிறைவேறி, இந்தப் புதிய பயணம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவர வேண்டும் என அவர் மனதார வாழ்த்தியுள்ளார்.



