ஸ்காட்லாந்தை வீழ்த்தி  அசத்திய இலங்கை அணி!

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

ஜுன் 28, 2023 - 10:59
ஸ்காட்லாந்தை வீழ்த்தி  அசத்திய இலங்கை அணி!
Image Source: Google

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் டாச் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்க - திமுத் கருணரத்ன இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் கருணரத்ன 7 ரன்களிலும், குசல் மெண்டிஸ் ஒரு ரன்னிலும், சமரவிக்ரம 26 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த நிஷங்க - அசலங்க இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். 

பின் 75 ரன்களில் நிஷங்க ஆட்டமிழக்க, அடுத்து வந்த டி சில்வா 23 ரன்களிலும், கேப்டன் தசுன் ஷனாக முதல் பந்திலேயும் விக்கெட்டுகளை இழந்தனர். 

அவர்களைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சரித் அசலங்கவும் 63 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியில் தொடக்க வீரர் மேத்யூ கிராஸ் 7 ரன்களிலும், பிராண்டன் மெக்முல்லன் 5 ரன்களிலும், கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் 5 ரன்களிலும் என ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான கிறிஸ்டோபர் மெக்பிரைட் 29 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து கிறிஸ் கிரீவ்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடக்க, மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

இதனால் ஸ்காட்லாந்து அணி 29 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இலங்கை அணி தரப்பில் மஹீஷ் தீக்‌ஷனா 3 விக்கெட்டுகளையும், வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இலங்கை அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.  

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!