இந்திய வீரர்களிடம் சிறப்பான திட்டம் இல்லை.. இயன் சேப்பல் அதிரடி பேச்சு

பொதுவாக இடது கை பேட்ஸ்மேன்களிடம் பேசும் போது ஓவர் தி விக்கெட் திசையிலிருந்து வீசும் வலது கை பவுலர்களை எதிர்கொள்வது மிகவும் கடினம்

Mar 10, 2023 - 13:58
இந்திய வீரர்களிடம் சிறப்பான திட்டம் இல்லை.. இயன் சேப்பல் அதிரடி பேச்சு

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை இந்தியா  பெற்றது.சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்தது. 

இருப்பினும் இந்தூரில் நடைபெற்ற 3ஆவது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் சிறப்பான வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து ஒயிட் வாஷ் தோல்வியையும் தவிர்த்தது. 

அதனால் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் அணியாக ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ள நிலையில் 2வது அணியாக தகுதி பெறுவதற்கு மார்ச் 9ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் துவங்கிய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபிளாட்டாக இருக்கும் பிட்ச்சில் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 378/5 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

டிராவிஸ் ஹெட் 32, மார்னஸ் லபுஸ்ஷேன் 3, ஸ்டீவ் ஸ்மித் 38, பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 17 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, கேமரூன் க்ரீன் ஆகியோர் சதமடித்து அசத்தியுள்ளனர்.

அதனால் பவுலர்கள் அதிரடியாக விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் தடுமாறுவதால் முதல் முறையாக இத்தொடரில் பேட்ஸ்மேன்கள் ராஜாங்கம் நடத்தும் இப்போட்டி 5 நாட்கள் முழுமையாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இப்போட்டியின் முதல் நாளில் சிறப்பாக பேட்டிங் செய்து சதமடித்த இடது கை பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜாவுக்கு எதிராக இந்திய பவுலர்கள் அரௌண்ட் தி விக்கெட் திசையில் தொடர்ந்து பந்து வீசி தவறு செய்து விட்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், “இடது கை பேட்ஸ்மன்களுக்கு எதிராக ஏன் எல்லா நேரங்களிலும் இந்தியா அரௌண்ட் தி விக்கெட் திசையில் பந்து வீசுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

அதில் எந்த சிறப்பான திட்டமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பொதுவாக இடது கை பேட்ஸ்மேன்களிடம் பேசும் போது ஓவர் தி விக்கெட் திசையிலிருந்து வீசும் வலது கை பவுலர்களை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்று என்னிடம் தெரிவிப்பார்கள். 

அது சரி என்றாலும் இந்தியா அரௌண்ட் தி விக்கெட் திசையில் மீண்டும் முயற்சிக்கிறார்கள். ஒருவேளை இந்த திட்டம் இங்கிலாந்து மண்ணில் அங்குள்ள கால சூழ்நிலைகளில் வேலை செய்யலாம். ஆனால் இந்தியாவில் உஸ்மான் கவஜா போன்ற ஆன் சைட் திசையில் வலுவான வீரருக்கு எதிராக பின்பற்றுவது மோசமானதாகும். 

அவர் கால்களில் அடிக்க முயற்சிக்கும் போது நீங்கள் ஏன் தொடர்ந்து அங்கேயே வீசுகிறீர்கள்? அதன் காரணமாக கவாஜா மிகவும் எளிதாக பேட்டிங் செய்தார். அவரது பேட்டிங்கை முறியடிப்பதற்கு தேவையான திட்டங்களுடன் இந்தியா வரவில்லை. அது இந்த போட்டியில் அவர்களுக்கு வலியை ஏற்படுத்த துவங்கி விட்டது” என்று தெரிவித்துள்ளார். 

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்