மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு?

தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், தடுப்பூசி பணிகள் ஆகியவை கொரோனா பரவல் குறைந்ததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 1, 2022 - 03:31
ஏப்ரல் 1, 2022 - 04:54
மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு?

இங்கிலாந்து, சீனா, ஹாங்காங் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகள் மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தனர். உறவுகளை பறிகொடுத்ததும், வாழ்வாதாரத்தை இழந்ததும் என விவரிக்க முடியாத இழப்புகளை சந்தித்தனர்.

தமிழ்நாட்டிலும் பல்வேறு மட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால் சமீபநாள்களாக கொரோனா பரவல் குறைந்து வருவது மக்களை நிம்மதி பெருமூச்சுவிடச் செய்தது. 

தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், தடுப்பூசி பணிகள் ஆகியவை கொரோனா பரவல் குறைந்ததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகளை நீக்கலாம் என ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. ஆனால் இந்த சகஜ நிலை எவ்வளவு நாள்கள் நீடிக்கும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

பாதிப்பு குறைவதையும் பின்னர் அடுத்த அலை கிளம்புவதையும் மக்கள் கடந்த இரு ஆண்டுகளாக அனுபவதித்தால் உருவாகும் நியாயமான கேள்வியே இது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக இங்கிலாந்து, சீனா, ஹாங்காங் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் சமீபநாள்களாக அதிகரித்து வருகிறது.

முதன்முதலாக சீனாவில் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கினாலும் விரைவாக அந்நாடு பாதிப்பை கட்டுப்படுத்தியது. அங்கு இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு தற்போது அதிகரிப்பது உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் ஐஐடியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நான்காவது அலை ஜூன் மாதத்தில் தொடங்கி ஆகஸ்ட் மாதம் உச்சத்தை எட்டும் என்று கணித்துள்ளனர்.

இருப்பினும் சில தொற்றுநோயியல் நிபுணர்கள் ஐஐடி ஆய்வை சந்தேகத்துடன் பார்க்கின்றனர். இந்தியாவில் பெரும்பாலானோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி அதன் மூலம் வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளனர். 
தடுப்பூசியும் அதிகளவில் செலுத்தப்பட்டுள்ளதால் நான்காவது அலை வந்தாலும் பெரியளவிலான பாதிப்பு இருக்காது என்கிறார்கள்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!