"வெனிசுலாவை நாங்கள் நிர்வாகம் செய்வோம்" – கைது செய்யப்பட்ட மதுரோவின் புகைப்படத்துடன் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
டிரம்ப் வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்க ராணுவம் கராகஸ் நகரில் 7 இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் ராணுவ தளத்திற்கு அருகில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் கைது செய்யப்பட்டு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், மதுரோவின் கண்கள் கட்டப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
டிரம்ப் கூறுகையில், “இரவு முதல் அதிகாலை வரை, எனது வழிகாட்டுதலில் அமெரிக்க ஆயுதப்படைகள் வெனிசுலா தலைநகர் கராகஸில் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இதுவரை காணாத அசாதாரண ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டன. வான், நிலம், கடல் ஆகியவற்றின் மூலம் ராணுவக் கோட்டை மையமாகக் கொண்டு வெற்றிகரமான தாக்குதல் நடத்தப்பட்டது. மதுரோவும் அவரது மனைவியும் கைப்பற்றப்பட்டு, அமெரிக்க நீதிமுன் நிறுத்தப்படுவார்கள்” என்றார்.
அவர் மேலும், “மதுரோ அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தலில் முக்கிய பங்காற்றிய சட்டவிரோத பயங்கரவாத வலையமைப்பின் தலைவர். அவர் மீது நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் இப்போது அமெரிக்க மண்ணில் விசாரணை எதிர்கொள்ள உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
டிரம்ப் வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்க ராணுவம் கராகஸ் நகரில் 7 இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் ராணுவ தளத்திற்கு அருகில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
மேலும், “வெனிசுலா நாட்டை நாங்கள் தற்காலிகமாக நிர்வாகம் செய்வோம். ஏனெனில், வேறு யாரும் உள்ளே வருவதை நாங்கள் விரும்பவில்லை. வெனிசுலா மக்களுக்கு அமைதி, சுதந்திரம் மற்றும் நீதி கிடைக்க வேண்டும்” என டிரம்ப் வலியுறுத்தினார்.
அவர் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களை வெனிசுலாவில் ஈடுபடுத்தி, பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்து உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், நாட்டிற்கு வருவாய் ஈட்டவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.