அமெரிக்காவில் அதிரடி முடிவு: கிரீன் கார்ட் லாட்டரி திட்டம் தற்காலிக நிறுத்தம்! Brown பல்கலைக்கழக துப்பாக்கிச் சூடு எதிரொலி
இந்த முடிவு இலங்கை மற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கடந்த காலங்களில் கிரீன் கார்ட் லாட்டரி மூலம் பலர் அமெரிக்காவுக்கு குடியேறியுள்ளனர்.
அமெரிக்காவின் Brown பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, கிரீன் கார்ட் லாட்டரி திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் குடிவரவு நடைமுறைகள் தொடர்பாக மீண்டும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த லாட்டரி திட்டத்தின் கீழ், குடியேற்றம் குறைவாக உள்ள நாடுகளிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 50,000 பேருக்கு குலுக்கல் முறையில் அமெரிக்க விசா வழங்கப்பட்டு வந்தது. ஆனால், Brown பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலை நடத்தியதாகக் கருதப்படும் 48 வயதான கிளாடியோ நெவ்ஸ் வாலண்டே, 2017ஆம் ஆண்டு பன்முகத்தன்மை லாட்டரி விசா (DV1) திட்டத்தின் மூலமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து கிரீன் கார்ட் பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது.
டிசெம்பர் 13 அன்று பல்கலைக்கழகத்தின் பொறியியல் கட்டிடத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த அவர் நடத்திய தாக்குதலில், இறுதித் தேர்வெழுதிக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 09 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் எல்லா குக் மற்றும் உஸ்பெக்-அமெரிக்கரான முகம்மது அஜீஸ் உமுர்சோகோவ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபரா வாலண்டே, MIT பேராசிரியர் நுனோ லூரேரோவை சுட்டுக் கொன்றதாகவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இவர்கள் இருவரும் 1990-களின் இறுதியில் போர்ச்சுகலில் உள்ள ஒரே பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆறு நாட்கள் நீடித்த தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு, நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள ஒரு சேமிப்புக் கிடங்கில் வாலண்டே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இந்த பின்னணியில், அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் இந்த குடிவரவு சேவைத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி ட்ரம்ப் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த முடிவு இலங்கை மற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கடந்த காலங்களில் கிரீன் கார்ட் லாட்டரி மூலம் பலர் அமெரிக்காவுக்கு குடியேறியுள்ளனர்.
ட்ரம்பின் உத்தரவின்பேரில், “இந்த அபாயகரமான திட்டத்தின் காரணமாக இனி எந்த அமெரிக்கருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவே விசா வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது” என உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோம் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பும், 2017ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்தபோது, அந்தத் தாக்குதலை நடத்தியவர் இதே லாட்டரி திட்டம் மூலம் அமெரிக்கா வந்தவர் என்பதால், ட்ரம்ப் இந்தத் திட்டத்தை முடிக்க முயன்றமை குறிப்பிடத்தக்கது.