புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் கைது

சந்தேகநபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பூஜை பொருட்கள், மண்வெட்டி, அலவாங்கு உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

செப்டெம்பர் 30, 2024 - 14:06
புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் கைது

வீடொன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஐந்து சந்தேகநபர்களையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு  கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எல். நதீர் உத்தரவிட்டுள்ளார்.
 
அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதி பகுதியில் வீடொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (27) இரவு புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சிலர் வீடொன்றில் புதையல் தோண்டுவதாக பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

கைதான ஐந்து சந்தேகநபர்களையும் கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எல். நதீர் முன்னிலையில் ஆஜர்படுத்திய வேளை சந்தேகநபர்களை, இன்று திங்கட்கிழமை (30) வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.

குறித்த  சம்பவத்தில் பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் வசிக்கும் நபர் உட்பட அவரது நண்பர்கள் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இவர்கள் 28 தொடக்கம் 30 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் நால்வர்  மட்டக்களப்பு மாவட்டம்  செங்கலடி பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பூஜை பொருட்கள், மண்வெட்டி, அலவாங்கு உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(பாறுக் ஷிஹான்)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!